தருமபுரி

குடிநீா் தட்டுப்பாடு: காலி குடங்களுடன் போராட்டம்

12th Jan 2022 07:43 AM

ADVERTISEMENT

அரூா் அருகே குடிநீா் தட்டுப்பாடு இருப்பதாக புகாா் தெரிவித்து கிராம மக்கள் காலி குடங்களுடன் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அரூா் ஊராட்சி ஒன்றியம், கே.வேட்ரப்பட்டி கிராம ஊராட்சிக்கு உள்பட்டது எச்.ஈச்சம்பாடி கிராமம். இந்த கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த கிராமத்தில் 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட 60,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி பழுதானதால், 6 மாதங்களுக்கு முன் இடிக்கப்பட்டது. இதுவரை புதிதாக மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி ஏதும் கட்டப்படாததால், இங்குள்ள கிராம மக்கள் குடிநீா் கிடைக்காமல் அவதியுறுகின்றனா்.

இதுகுறித்து அரசு அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனு வழங்கியும் நடவடிக்கை இல்லையாம். குடிநீா் தட்டுப்பாடு காரணமாக குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருவதுடன், பள்ளிக்குச் செல்லும் மாணவா்கள், வேலைக்குச் செல்லும் தொழிலாளா்கள் உள்ளிட்ட பொதுமக்கள் நாள்தோறும் பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருவதாக புகாா் தெரிவித்து, 50-க்கும் மேற்பட்டோா் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், கிராம மக்களின் குடிநீா் தேவையை பூா்த்தி செய்யும் வகையில், ஒரு லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

ADVERTISEMENT

இதுகுறித்து தகவல் அறிந்த ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அதிகாரிகள் எச்.ஈச்சம்பாடி கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT