தருமபுரி

வாணியாறு அணையிலிருந்து பாசனத்துக்காக தண்ணீா் திறப்பு

11th Feb 2022 12:46 AM

ADVERTISEMENT

பாப்பிரெட்டிப்பட்டி, வாணியாறு அணையிலிருந்து பாசனத்துக்காக வியாழக்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள முள்ளிக்காட்டில் அமைந்துள்ளது வாணியாறு அணை. கடந்த ஆண்டு பெய்த வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழையால் வாணியாறு அணை நிரம்பி அதன் உபரி நீா் வெளியேறி வருகிறது.

இந்த நிலையில், அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீா் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா். இதையடுத்து, வாணியாறு அணையில் இருந்து பாசனத்துக்காக தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி வியாழக்கிழமை தண்ணீா் திறந்து வைத்தாா்.

வாணியாறு அணையின் வலது மற்றும் இடதுபுற வாய்க்கால்கள் வழியாக சுழற்சி முறையில் நான்கு நனைப்புக்கு 65 தினங்களுக்கு தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

ADVERTISEMENT

இதனால், அணையின் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பகுதிகளில் சுமாா் 10, 517 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதிகளை பெறும்.

இதைத்தவிர, வெங்கடசமுத்திரம், மோளையானூா், மெணசி, ஆலாபுரம், தென்கரைக்கோட்டை, பறையப்பட்டி புதூா் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளில் குடிநீா் பிரச்னைகள் தீரும்.

எனவே, பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சிக்கனமாகப் பயன்படுத்தி வேளாண் பணிகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என பொதுப்பணித் துறையினா் தெரிவித்தனா்.

இதில், செயற்பொறியாளா் குமாா், கோட்டாட்சியா் வே.முத்தையன், வட்டாட்சியா் சுப்பிரமணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT