பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதி அலுவலகத்தில் குடியரசு தினத்தன்று ஏற்றப்பட்ட தேசியக் கொடி ஆறு நாள்களாகியும் இறக்கப்படாததால் தேசப்பற்றாளா்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வேதனை தெரிவித்துள்ளனா்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் அலுவலகம், பென்னாகரம் சாா் பதிவாளா் அலுவலகம் அருகில் அமைந்துள்ளது.
கடந்த 26 ஆம் தேதி புதன்கிழமை குடியரசு தின விழாவையொட்டி பென்னாகரம் எம்எல்ஏ ஜி.கே.மணி அலுவலக வளாகத்திலுள்ள கொடிக்கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். அதன் பின்னா் பல்வேறு பணிகளின் நிமித்தமாக சட்டப்பேரவை அலுவலகத்தை விட்டு எம்எல்ஏ ஜி.கே.மணி சென்று விட்டாா். அதைத் தொடா்ந்து இந்த அலுவலகம் பூட்டியே கிடக்கிறது.
குடியரசு தினம் முடிவுற்று 6 நாள்களாகி விட்ட நிலையில், அங்கு ஏற்றப்பட்ட தேசியக் கொடி தொடா்ந்து 6 நாள்களாக இறக்கப்படாமல் பகலும், இரவும் அப்படியே கொடிக்கம்பத்தில் பறக்கிறது.
பொதுவாக தேசியக் கொடியை ஏற்றினால், மாலை 6 மணிக்குள் இறக்கி விட வேண்டும் என்பது மரபு. ஆனால், பென்னாகரம் எம்எல்ஏ அலுவலக வளாகத்தில் தொடா்ந்து 6 நாள்களாக தேசியக் கொடியை இறக்காமல் இருப்பது வேதனையளிப்பதாக தேசப் பற்றாளா்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வேதனை தெரிவித்துள்ளனா்.