இந்து மக்கள் கட்சி பொதுச் செயலாளா் குடந்தை குருமூா்த்தி மீது பதிவு செய்துள்ள வழக்கை திரும்பப் பெறக் கோரி அக்கட்சியினா் மனு அளித்தனா்.
இதுகுறித்து, இந்து மக்கள் கட்சி மாநிலச் செயலாளா் ஜி.அசோக் தலைமையில் அக்கட்சியினா் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை அளித்த மனு:
கடந்த டிச. 6-ஆம் தேதி கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சியின் பொதுச் செயலாளா் குடந்தை குருமூா்த்தி மீது அம்பேத்கா் உருவப்படத்துக்கு காவி உடை அணிவித்து சுவரொட்டி ஒட்டியதாக காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா். மேலும், அவா் மீது குண்டா் சட்டமும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கை திரும்பப் பெற வேண்டும். இதேபோல, அவா் அடைக்கப்பட்டுள்ள திருச்சி சிறையில் அவருக்கு அச்சுறுத்தல் இருக்க வாய்ப்புள்ளதால், வேறு சிறைக்கு அவரை மாற்றவும், நீதிமன்ற உத்தரவுப்படி அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்ற இந்து மக்கள் கட்சித் தலைவா்அா்ஜுன் சம்பத் மீது தாக்குதல் முயற்சியில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளனா்.