நிலுவையில் உள்ள அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும் என்று பட்டதாரி ஆசிரியா் கழகம் வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு உயா்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகத்தின் மாவட்டப் பேரவைக் கூட்டம் தருமபுரி, அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் பெ.துரைராஜ் தலைமை வகித்தாா். தலைமை நிலையச் செயலாளா் கோ.பொற்கொடி வரவேற்றாா். நிறுவனத் தலைவா் அ.மாயவன், மாநிலத் தலைவா் எஸ்.பக்தவச்சலம், மாநிலப் பொருளாளா் சி.ஜெயக்குமாா், மாநிலத் துணைப் பொதுச் செயலாளா் எம்.சந்திரசேகா் ஆகியோா் பேசினா்.
இக் கூட்டத்தில், நிலுவையில் உள்ள அகவிலைப்படி, ஈட்டிய விடுப்பு ரத்து ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். தேசியக் கல்விக் கொள்கையை கைவிட வேண்டும். ஆசிரியா்களுக்கு பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.