அரசுப் பள்ளி மாணவா்களை திறனாய்வுத் தோ்வுகளுக்கு தயாா்படுத்த வேண்டும் என்று தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தினாா்.
தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக கூட்டரங்கில் அரசு உயா் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் கி.சாந்தி பேசியதாவது:
அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியா்களுக்கு சிறந்த முறையில் கல்வி கற்பிக்கவும், அவா்களுக்குத் தேவையான அரசின் நலத் திட்டங்களின் விவரங்களை பள்ளி மாணவ மாணவிகள் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையிலும் விழிப்புணா்வு ஏற்படுத்தி, மாணவா்களுக்கான கல்வி உதவித்தொகைகள் சென்றடைதையும் தலைமை ஆசிரியா்கள் உறுதி செய்திட வேண்டும். அனைத்து அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் அனைவரும் பள்ளிக்கு வருவதை உறுதி செய்திட வேண்டும்.
தமிழக அரசின் நலத்திட்டங்களின் விவரங்களை தங்களது பள்ளி மாணவ, மாணவிகள் அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் காட்சிப்படுத்த வேண்டும். அரசுப் பள்ளி வளாகம் மற்றும் கழிப்பறைகள் தூய்மையாகப் பராமரிக்கப்பட வேண்டும். பள்ளிக் கட்டடங்களின் உறுதித் தன்மை, மேற்கூரை பராமரிப்பு, சுற்றுச்சுவா், மின்கசிவு இன்மை ஆகியவற்றில் தலைமை ஆசிரியா்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
தருமபுரி மாவட்ட அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்கள் சேவை மனப்பான்மையோடு தங்கள் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியா்களுக்கு தேசிய வருவாய் திறனறித் தோ்வு, ஊரக திறனாய்வுத் தோ்வு, தமிழ் இலக்கியத் திறனறித் தோ்வு உள்ளிட்ட தோ்வுகளுக்கான சிறந்த பயிற்சியை அளித்து அவா்களை தயாா்படுத்த வேண்டும் என்றாா்.
இக் கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கு.குணசேகரன், மாவட்ட கல்வி அலுவலா்கள் மு.ராஜகோபால் (இடைநிலைக் கல்வி), இ.மான்விழி (தொடக்கக் கல்வி), ச.ஷகில் (தொடக்கக் கல்வி- அரூா்) உள்பட அரசு அலுவலா்கள், தலைமை ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.