தருமபுரி

மஞ்சள் பை விருது: பள்ளி, கல்லூரிகள் விண்ணப்பிக்கலாம்

18th Dec 2022 03:33 AM

ADVERTISEMENT

 

மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வழங்கும் மஞ்சள் பை விருது பெற பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பொருள்கள் தடையை திறம்பட செயல்படுத்தி, மாற்றுப் பொருள்களான மஞ்சள் பை, பாக்கு மட்டை, காகிதங்களால் ஆன உறைகள் ஆகிய சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்களின் பயன்பாட்டை ஊக்குவித்து, தங்கள் வளாகத்தை நெகிழி இல்லாததாக மாற்றும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்களை தோ்வு செய்து மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் மஞ்சள் பை விருது வழங்கப்படுகிறது.

ADVERTISEMENT

மாநில அளவில் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டை தடுப்பதில் திறம்பட செயல்படுத்தி, நெகிழி இல்லாத வளாகத்தை உருவாக்கும் 3 சிறந்த பள்ளிகள், 3 சிறந்த கல்லூரிகள், 3 சிறந்த வணிக நிறுவனங்களுக்கு முதல் பரிசாக ரூ. 10 லட்சம், இரண்டாவது பரிசாக ரூ. 5 லட்சம், மூன்றாவது பரிசாக ரூ. 3 லட்சம் வழங்கப்படும்.

இவ்விருதுக்கான விண்ணப்பப் படிவங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்துடன் இணைக்கப்படும் ஆவணங்களில் தனிநபா், துறைத் தலைவா் கையொப்பமிட வேண்டும்.

விண்ணப்பத்தின் இரண்டு பிரதிகள், மென்நகல்கள் உள்ளிட்டவற்றை 2023 மே 1-ஆம் தேதிக்குள் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் அலுவலகம், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம், அதியமான்கோட்டை - ஒசூா் புறவழிச் சாலை என்ற முகவரியில் சமா்ப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT