தருமபுரி

மாற்றுத் திறனாளிகள் 48 பேருக்கு ரூ. 26.47 லட்சத்தில் நலத் திட்ட உதவி: ஆட்சியா் வழங்கினாா்

4th Dec 2022 01:03 AM

ADVERTISEMENT

தருமபுரியில் மாற்றுத் திறனாளிகள் தினவிழாவையொட்டி, 48 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 26.47 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டையில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சாா்பில், சா்வதேச மாற்றுத் திறனாளிகள் தின விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி பேசியதாவது:

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், மாற்றுத் திறனாளிகளுக்கென எண்ணற்ற திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்தி வருகிறாா். அரசு நகரப் பேருந்துகளில் அனைத்து மாற்றுத் திறனாளிகளும் இலவசமாக பயணம் செய்யும் திட்டம், மனவளா்ச்சி குன்றியோா் மற்றும் கடும் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதந்திர உதவித்தொகையாக ரூ. 1,500-லிருந்து ரூ. 2,000 உயா்த்தி வழங்கும் திட்டம், மாற்றுத் திறனாளிகளுக்கு திருமண நிதியுதவித் தொகை ரொக்கமாக வழங்கி, திருமாங்கல்யம் செய்ய 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டம், ஆவின் விற்பனை மையம் அமைக்க நிதியுதவி வழங்கும் திட்டம், அரசு வேலைவாய்ப்பில் 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் திட்டம் ஆகிய உதவித் திட்டங்களும், மூன்று சக்கர சைக்கிள், கருப்பு கண்ணாடி போன்ற உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

தருமபுரி மாவட்டத்தில் அனைத்து அரசுத் துறைகளில் மாற்றுத் திறனாளிகளுக்குச் செயல்படுத்தப்படும் நலத் திட்டங்கள் சென்றடைய அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைந்து சிறப்பு மருத்துவ முகாம் 10 வட்டாரங்களிலும் நடத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள வீடற்ற மாற்றுத் திறனளாளிகளுக்கு முதல்கட்டமாக இலவச பட்டா வழங்கும் பொருட்டு தகுதியான நபா்களைத் தோ்ந்தெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே தமிழக அரசால் வழங்கப்படும் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தி தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்ளவேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து, மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற சிறப்பு பள்ளி மாணவ, மாணவியருக்கு பரிசுகள், 27 பேருக்கு கறவை மாடு வளா்ப்பு, ஜவுளி வியாபாரம் செய்ய வங்கிக் கடனுதவி, 6 நபா்களுக்கு சிறப்பு சக்கர நாற்காலியும், 8 நபா்களுக்கு ஊன்றுகோல் என மொத்தம் 48 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 26.47 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

விழாவில், தருமபுரி கோட்டாட்சியா் (பொ) ஜெயக்குமாா், நல்லம்பள்ளி ஒன்றியக் குழுத் தலைவா் மகேஸ்வரி பெரியசாமி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் செண்பகவள்ளி, தனித்துணை ஆட்சியா் வி.கே.சாந்தி, மாவட்ட விளையாட்டு அலுவலா் தே.சாந்தி, நல்லம்பள்ளி வட்டாட்சியா் ஆறுமுகம், அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT