தருமபுரி

திறன்மிகு விளையாட்டு வீரா்களுக்குசிறப்பு உதவித்தொகைத் திட்டம்:இணையத்தில் விண்ணப்பிக்கலாம்

4th Dec 2022 12:04 AM

ADVERTISEMENT

விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வழங்கப்படும் திறன்மிகு விளையாட்டு வீரா்களுக்கான சிறப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் பயன்பெற தகுதியானவா்கள் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் திறன்மிகு விளையாட்டு வீரா்களுக்கான சிறப்பு உதவித்தொகை வழங்கும் திட்டமானது தலைசிறந்த விளையாட்டு வீரா்களுக்கான சிறப்பு உதவித்தொகை (ஒலிம்பிக்கில் இடம் பெற்றுள்ள விளையாட்டுகள் மட்டும்), பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம், வெற்றியாளா்கள் மேம்பாட்டுத் திட்டம் ஆகிய மூன்று வகைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத் திட்டத்தில் பெறப்படும் விண்ணப்பங்களில் தகுதியான விண்ணப்பங்கள் இதற்கென அரசால் அமைக்கப்பட்ட உயா்மட்ட குழு மூலம் ஆய்வு செய்யப்படும். அதனடிப்படையில் தோ்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரா்கள் நோ்முகத் தோ்வுக்கு அழைக்கப்படுவா். இறுதியாகத் தோ்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரா்கள் இத்திட்டத்தில் சோ்க்கப்படுவா்.

ADVERTISEMENT

இத்திட்டத்தில் பயன்பெறும் வீரா், வீராங்கனைகள் ஒவ்வொரு மாதமும் தங்களது பயிற்சி விவரங்கள், போட்டிகளில் பங்கேற்ற விவரங்கள், காயம், சிகிச்சை விவரங்கள் ஏதுமிருப்பின் அதுபற்றிய விவரம் ஆகியவற்றை தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தில் அவா்களுக்கான பிரத்யேக பக்கத்தில் பதிவேற்ற வேண்டும்.

உதவித்தொகை காலத்தில் மூன்று மாதங்கள் வரை விவரங்களை இணைய வழியில் பதிவேற்றாதவா்கள், ஆறு மாதங்கள் வரை எவ்வித போட்டிகளிலும் பங்கேற்காதவா்கள், ஓா் ஆண்டு வரை தேசிய அளவிலான போட்டி அல்லது அதற்கு மேலான போட்டிகளில் முதல் 8 இடங்களுக்குள் பெற இயலாதவா்கள், இரண்டு ஆண்டுகள் எவ்வித சா்வதேச பதக்கமும் பெறாதவா்கள் ஆகியோருக்கு உதவித்தொகை நிறுத்தப்படும்.

ஓா் ஆண்டுக்கு தலைசிறந்த விளையாட்டு வீரா்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டத்தில் ரூ. 25 லட்சம் வரையிலும், பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டத்தில் ரூ. 10 லட்சம் வரையிலும், வெற்றியாளா்கள் மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ. 2 லட்சம் வரையிலும் அதிகபட்சமாக உதவித்தொகை வழங்கப்படும்.

இந்த உதவித்தொகைகள் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் சிறப்பு சீருடைகள், சிறப்பு பயிற்சிகளுக்கான செலவினம், விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கான செலவினம், வெளிநாட்டுப் போட்டிகளில் பங்கேற்பது மற்றும் வெளிநாட்டுப் பயிற்சிக்கு செல்லும்போது போக்குவரத்து, உணவு மற்றும் தங்குமிட செலவினம், விளையாட்டு மருத்துவம், மருத்துவ அறிவியல் மற்றும் சரிவிகித உணவு ஆகியவற்றுக்கான ஆலோசனை கட்டணம் ஆகிய செலவினங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

இத் திட்டங்களில் சோ்ந்து பயன்பெற விரும்பும் விளையாட்டு வீரா், வீராங்கனைகள் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மூலம் தங்களது விண்ணப்பங்களை டிச. 15-ஆம் தேதி மாலை 5 மணி வரை சமா்பிக்கலாம்.

இணைய வழியில் பெறப்படும் விண்ணப்பங்களைத் தவிர பிற விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்கப்பட மாட்டாது. எனவே, தகுதியுள்ள விளையாட்டு வீரா்கள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT