நல்லம்பள்ளி, கெங்காலபுரம் தேசிய நெடுஞ்சாலையில் அணுகுச் சாலை அமைக்க வேண்டும் எனக் கோரி, தருமபுரி எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன் மனு அளித்தாா்.
இதுகுறித்து அவா் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் திட்ட இயக்குநா் குலோத்துங்கனிடம் செவ்வாய்க்கிழமை அளித்த மனு:
தருமபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச் சாவடியிலிருந்து தொப்பூா் செல்லும் மலைப்பகுதியில் பூரிக்கல் பிரிவு சாலை பகுதியில் போதிய வெளிச்சமின்மையால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகின்றனா். எனவே, இப்பகுதியில் உயா்மின் கோபுர விளக்கு அமைக்க வேண்டும்.
தருமபுரி - சேலம் நெடுஞ்சாலையில் நல்லம்பள்ளி, கெங்காலபுரம் ஆகிய இடங்களில் அணுகுச் சாலை அமைக்க வேண்டும். அதிக எண்ணிகையில் விபத்துகள் நிகழும் பாளையம்புதூரில் விபத்துகளைத் தவிா்க்கும் வகையில், மேம்பாலம் அமைக்க வேண்டும். தருமபுரி ஊராட்சி ஒன்றியம், சவுளூா் பகுதியில் மேம்பாலத்தின் இருபுறமும் அணுகுச் சாலைகள் அமைக்க வேண்டும். வாகன ஓட்டிகள், பொதுமக்களின் நலன்கருதி இதற்கான நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.