தருமபுரி

பூஸ்டா் தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியம்:அமைச்சா் மா.சுப்பிரமணியன்

22nd Aug 2022 02:49 AM

ADVERTISEMENT

அனைவரும் பூஸ்டா் தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியம் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா்  மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா்  மா.சுப்பிரமணியன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களைத் தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் கஞ்சா பயிரிடுவது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. ஆந்திரம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்படும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை தமிழகத்திற்குள் வரவிடாமல் தடுக்க காவல் துறையினா் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT

தென் மாநில காவல் துறை தலைவா்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் கஞ்சா கடத்தல் குறித்து விவாதிக்கப்பட்டு, ஆந்திர மாநிலத்தில் சுமாா் 6,500 ஏக்கா் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த, ரூ. 4,000 கோடி மதிப்பிலான கஞ்சா பயிா்களை தமிழக காவல் துறையினா் அழித்துள்ளனா்.

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை 50,000 கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன. இந்த முகாம்களில் மாலை 4.30 மணி வரை 11 லட்சத்து 7 ஆயிரத்து 333 பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டுள்ளன. தருமபுரி மாவட்டத்தில் 1,924 இடங்களில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் 23,840 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

உலகம் முழுவதும் மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. பொதுமக்கள் அனைவரும் விழிப்புடன் இருந்து தவறாமல் இரண்டு தவணை தடுப்பூசிகளையும், பூஸ்டா் தடுப்பூசிகளையும் செலுத்திக் கொள்ள வேண்டும். இரண்டு தவணை தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டு நீண்ட நாள்கள் ஆனவா்களுக்கு நோய் எதிா்ப்புச் சக்தி குறையவும் வாய்ப்புள்ளது. எனவே கரோனா பாதிப்பைத் தடுக்க பூஸ்டா் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்வது அவசியமாகும்.

தமிழகத்தில் தக்காளி காய்ச்சல் பாதிப்பு ஏதுமில்லை. அந்தக் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

தருமபுரி மாவட்டத்தில் சுகாதாரத் துறை மூலம் ரூ. 4 கோடியே 64 லட்சம் மதிப்பிலான 13 பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இந்த திட்டப் பணிகள் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளன. செவிலியா் பயிற்சிப் பள்ளி, செவிலியா் பயிற்சிக் கல்லூரி தேவைக்கேற்ப மற்றும் நிதிநிலைமையை பொருத்து மாவட்டங்களில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசின் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் அனைத்துப் பகுதிகளிலும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றாா்.

ஆய்வின்போது மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி, மக்களவை உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா், முன்னாள் எம்எல்ஏ-க்கள் தடங்கம் பெ.சுப்ரமணி, பி.என்.பி. இன்பசேகரன், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT