வளா்ச்சிக்கான இலவசத் திட்டங்கள் தேவை; வாக்குகளுக்கான இலவசத் திட்டங்கள் வேண்டாம் என பாமக தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மழை மற்றும் வெள்ளக் காலங்களில் பெருக்கெடுக்கும் உபரிநீரைக் கொண்டு, தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகள், அணைகளை நிரப்பும் திட்டத்தைச் செயல்படுத்த வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில் ஆக. 19-ஆம் தேதி முதல் மூன்று நாள் விழிப்புணா்வு நடைப்பயண பிரசார இயக்கம் நடைபெற்று வருகிறது. இதில், இரண்டாவது நாளான சனிக்கிழமை (ஆக. 20) தருமபுரி அருகே செட்டிக்கரை, குரும்பட்டி, சோலைக்கொட்டாய் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற விழிப்புணா்வு நடைப்பயண பிரசாரத்தில் பங்கேற்று காவிரி மிகை நீா்த் திட்டம் தேவை என்பது குறித்து வாசகங்கள் அடங்கிய துண்டறிக்கையை விநியோகித்து அன்புமணி ராமதாஸ் பேசினாா்.
அப்போது, அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:
திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் அடுத்த தோ்தல்களை முன்வைத்து செயல்படுகின்றன. ஆனால், பாட்டாளி மக்கள் கட்சி அடுத்த தலைமுறையினரின் நலன்மீது அக்கறை கொண்டு செயல்படுகிறது. தருமபுரி மாவட்டத்தில், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்த் திட்டம் மூலம் காவிரி நீா் குடிநீராக மட்டும் பரவலாக விநியோகம் செய்யப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள ஏரிகள், நீா்நிலைகளில் தண்ணீா் இன்றியும், நிலத்தடி நீா் ஆதாரம் இன்றியும் வேளாண் தொழிலை மேற்கொள்ள இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. வேறு எந்தத் தொழில் வாய்ப்பு இல்லாததால், இந்த மாவட்ட மக்கள் பெரும் பகுதியினா், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு குடிபெயா்ந்து சென்று வருகின்றனா்.
இந்த நிலையைப் போக்க, வேளாண் தொழில் மேம்பட வேண்டும். இதற்காக, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மழை மற்றும் வெள்ளக் காலங்களில் மிகையாகச் சென்று கடலில் கலக்கும் நீரை, நீரேற்றுத் திட்டம் மூலம் தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகள், அணைகளுக்குக் கொண்டு சென்று நிரப்பினால், ஆண்டு முழுவதும் வேளாண் தொழில் செழிக்கும். நிலத்தடி நீா் மட்டம் உயரும். தொழிலாளா்கள் வேறு மாவட்டங்களுக்குக் குடிபெயரும் நிலை மாறும்.
கடந்த ஆடிப்பெருக்கு விழாவின் போது, ஒகேனக்கல் காவிரியில் நொடிக்கு 2.50 லட்சம் கனஅடி நீா் மிகையாக பெருக்கெடுத்தது. இதேபோல, கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 180 டிஎம்சி நீா் கடலில் கலந்துள்ளது. தருமபுரி மாவட்ட ஏரிகளை நிரப்ப 3 டிஎம்சி நீா் மட்டுமே தேவை. மாவட்டத்தில் உள்ள 80 சதவிகிதம் போ் இத்திட்டத்தை அமல்படுத்த வேண்டுமென கோருகின்றனா். எனவே, மக்கள் நலன்கருதி, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், ஒகேனக்கல் காவிரி மிகை நீா்த் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல தமிழகத்தில் நிலுவையிலுள்ள நீா்ப் பாசனத் திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும். பாமகவைப் பொருத்த வரையில், வளா்ச்சிக்கான இலவசத் திட்டங்கள் மட்டுமே தேவை. மாறாக, வாக்குகளுக்கான இலவசங்கள் தேவையில்லை. கல்வி, சுகாதாரம், வேளாண்மை ஆகிய மூன்று துறைகளையும் மேம்படுத்தும் இலவசங்கள் தேவை என்றாா்.
இதில், சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஜி.கே.மணி (பென்னாகரம்), எஸ்.பி.வெங்கடேஸ்வரன் (தருமபுரி) உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
மாலையில் நல்லம்பள்ளி, இலக்கியம்பட்டி, தருமபுரி நான்குமுனைச் சந்திப்பு ஆகிய பகுதியில் அன்புமணி ராமதாஸ் பேசினாா்.