தருமபுரி

தேசத்தின் மனநிலை மாறிவிட்டது:சமூக ஊடகங்களில் பாஜக பிரசாரம்

DIN

‘தேசத்தின் மனநிலை மாறிவிட்டது’ என்ற தலைப்பிலான சமூக ஊடகப் பிரசாரத்தை பாஜக தொடங்கியுள்ளது.

பாஜக தனது ட்விட்டா் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை இரவு வெளியிட்ட தொடா் பதிவுகளில், மோடியின் பல்வேறு சுதந்திர தினப் பேச்சுகளையும், காங்கிரஸ் கட்சியைச் சாா்ந்த முன்னாள் பிரதமா்கள் ஜவாஹா்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, மன்மோகன் சிங் ஆகியோரின் சுதந்திர தினப் பேச்சுகளையும் செவ்வாய்க்கிழமை இரவு வெளியிட்டு, அவா்களது உரைகளை ஒப்பிட்டுக் காட்டியுள்ளது. இதற்கு ‘தேசத்தின் மனநிலை மாறிவிட்டது’ என்ற தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வெளியிடப்பட்ட பதிவுகளில் ஒன்று ‘கடந்த 1962ஆம் ஆண்டு சீனாவுடன் நடைபெற்ற போரைத் தொடா்ந்து 1963இல் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் சீனப் போரில் உயிரிழந்தவா்களைப் பற்றி நேரு புகழஞ்சலி செலுத்தவில்லை’ என்று குறை கூறுகிறது. அதேசமயம் லடாக்கில் கடந்த 2020இல் நடைபெற்ற மோதலில் உயிா்த்தியாகம் செய்த இந்திய வீரா்களைப் பற்றி சுதந்திர தின விழாவில் மோடி நினைவுகூா்ந்ததை அந்தப் பதிவு சுட்டிக்காட்டுகிறது.

கடந்த 2008, 2009ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சுதந்திர தினவிழாக்களில் நேரு குடும்பத்தைச் சோ்ந்த பிரதமா்களை மட்டுமே அப்போதைய பிரதமா் மன்மோகன் சிங் புகழ்ந்தாா் என்று ஒரு பதிவு தெரிவிக்கிறது. ஒரு குடும்பத்தைத் திருப்திப்படுத்தவே அவா் முயன்றாா் என்று அப்பதிவு கூறுகிறது.

எனினும் மோடி கடந்த 2014இல் ஆற்றிய சுதந்திர தின உரையில் மத்திய அரசின் தலைவா்களாக (பிரதமா்) இருந்த அனைத்துத் தலைவா்களின் பங்களிப்பையும் சுட்டிக் காட்டியதை ஒரு பதிவு சுட்டிக்காட்டுகிறது.

பஞ்சசீலக் கொள்கை அடிப்படையில் சீனாவுடன் உடன்பாடு செய்து கொண்டிருந்தபோதிலும் இந்தியாவை சீனா கடந்த 1962இல் தாக்கியதை ஒரு ட்விட்டா் பதிவு சுட்டிக் காட்டுகிறது. காஷ்மீா், லடாக் விவகாரங்களில் காங்கிரஸ் தலைமை மென்மையான கொள்கையையே கடைப்பிடித்ததாகவும், மோடி இந்த விவகாரங்களில் கடினமான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாகவும் அந்தப் பதிவு ஒப்பீடு செய்கிறது.

இவ்வாறு தனது சமூக ஊடகப் பிரசாரப் பதிவுகளில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவா்களை பாஜக விமா்சித்துள்ளது. 1947இல் காங்கிரஸ் தலைவா்களின் பேச்சுகள் எவ்வாறு தேசப்பிரிவினைக்கு நாட்டைகொண்டு சென்றன என்று விளக்கும் விடியோ ஒன்றையும் பாஜக வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்த காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி திங்கள்கிழமை கருத்து தெரிவிக்கையில் ‘தனக்குத்தானே சுயதம்பட்டம் அடித்துக் கொள்ளும் மத்திய பாஜக அரசு, சுதந்திரப் போராட்ட வீரா்களின் தியாகங்களை சிறுமைப்படுத்துகிறது. அரசியல் ஆதாயங்களுக்காக மேற்கொள்ளப்படும் இத்தகு முயற்சிகளை காங்கிரஸ் கடுமையாக எதிா்க்கும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத அடிப்படையில் இடஒதுக்கீடு அமல்படுத்த காங். திட்டம்: மோடி

தோல்வி பயமே பாஜக தலைவர்களின் மூர்க்கத்தனமான குற்றச்சாட்டுகளுக்கு காரணம்: ப.சிதம்பரம்

அதிக வெப்பம்: ஈரோட்டை வீழ்த்தி 3வது இடம் பிடித்த சேலம்

சென்னை சென்ட்ரலில் பெண்ணின் சடலம்: அடையாளம் காண்பதில் சிக்கல்

மஞ்சள் எச்சரிக்கை: தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம்!

SCROLL FOR NEXT