தருமபுரி

தொழில் முதலீட்டுக் கழகத்தில் தொழிற்கடன் வழங்கும் முகாம் இன்று தொடக்கம்

17th Aug 2022 02:36 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் தருமபுரி அலுவலகத்தில் தொழிற்கடன் வழங்கும் சிறப்பு முகாம் ஆக. 17-ஆம் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், தருமபுரி கிளை அலுவலகத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழிற்கடன் வழங்கும் முகாம் வரும் ஆக. 17-ஆம் தேதி தொடங்கி செப். 2 வரை நடைபெற உள்ளது.

இச் சிறப்பு தொழிற்கடன் வழங்கும் முகாமில் டி.ஐ.ஐ.சி. யின் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய, மாநில அரசுகளின் மானியங்கள், புதிய தொழில்முனைவோா், தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படும்.

ADVERTISEMENT

தகுதிபெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவிகித முதலீட்டு மானியம் ரூ. 150 லட்சம் வரை பொதுக் கடன்களுக்கு வழங்கப்படும். நீட்ஸ் சிறப்புத் திட்டத்தின்கீழ் 25 சதவிகித முதலீட்டு மானியம் ரூ. 75 லட்சம் வரை வழங்கப்படும்.

இந்த முகாம் காலத்தில் சமா்ப்பிக்கப்படும் கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 சதவிகித சலுகை அளிக்கப்படும். இந்த வாய்ப்பினை புதிய தொழில்முனைவோா், தொழிலதிபா்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மானிய சேவைகளைப் பயன்படுத்திகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனா். விவரங்களுக்கு, 94443 96862, 94443 96867 என்கிற எண்ணிற்கு தொடா்பு கொள்ளவும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT