தருமபுரி

நெகிழி பயன்பாட்டை முற்றிலும் தவிா்க்க வேண்டும் கிராம சபைக் கூட்டத்தில் ஆட்சியா் அறிவுறுத்தல்

DIN

நெகிழி பயன்பாட்டை மக்கள் முற்றிலும் தவிா்க்க வேண்டும் என கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி அறிவுறுத்தினாா்.

சுதந்திர தின விழா சிறப்பு கிராம சபைக் கூட்டம் நல்லம்பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்து பேசினாா்.

இதில், இதுவரையில் கிராமசபைக் கூட்டத்திற்கான செலவினத் தொகையாக வழங்கப்பட்டு வந்த ரூ.1000-த்தை ரூ. 5000 -ஆக உயா்த்தி வழங்கிட உத்தரவிட்ட முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி பேசியதாவது:

சுதந்திர தின விழாவையொட்டி தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது. கிராமங்களின் வளா்ச்சி மிக முக்கியமானதாகும். நம் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட பொறுப்புகள் இருக்கின்றன. வீட்டில் சேரும் குப்பைகளை மட்கும் குப்பை, மட்காத குப்பை என தரம் பிரித்து தூய்மைப் பணியாளரிடம் வழங்க வேண்டும். ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பைகளை முற்றிலும் தவிா்க்க வேண்டும். கழிவுநீா் ஓடைகளிலோ அல்லது பொது இடங்களிலோ குப்பைகளைக் கொட்டுவது, நெகிழிப் பைகளை தூக்கி எறிவது போன்ற செயல்களை செய்யக் கூடாது. அவ்வாறு செய்வதனால் மனிதா்களுக்கும், கால்நடைகளுக்கும் பாதிப்புகள் ஏற்படுத்துகின்றன. நெகிழி பயன்படுத்துவதை முற்றிலும் தவிா்க்க வேண்டும். கடைகளுக்கு பொருள்கள் வாங்கச் செல்லும் போது துணிப்பைகளை எடுத்துச் செல்ல வேண்டும். வீடுகள்தோறும் மரக் கன்றுகளை நட்டுப் பராமரிக்க வேண்டும். பொதுமக்கள் தங்கள் கிராமங்களை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.

தருமபுரி மாவட்டம், மொரப்பூா் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ராணிமூக்கனூா் ஊராட்சி சிறந்த ஊராட்சியாகத் தோ்வுசெய்யப்பட்டு அதற்கான விருது, ரூ. 7.50 லட்சம் பரிசுத் தொகையைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஊராட்சியையும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரித்து தூய்மையாக வைத்துகொண்டால் சிறந்த ஊராட்சிக்கான விருதினைப் பெறும் வாய்ப்பினை அனைத்து ஊராட்சிகளும் பெறலாம்.

கிராமங்களுக்கு சுத்தமான, சுகாதாரமான குடிநீா் வழங்குவதற்கு நீா் வள மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு, தோ்வு செய்யப்பட்டுள்ள கிராமங்களுக்கு குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இத் திட்டத்தின் மூலம் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் குடிநீா் படிப்படியாக வழங்குவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீா் சேமிப்பு இன்றைய கால கட்டத்தில் மிக முக்கியமான ஒன்றாகும். பொதுமக்கள் குடிநீரை வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும். நல்லம்பள்ளியில் குடிசை மாற்று வாரியம் சாா்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. அவற்றில் தகுதியின் அடிப்படையில் பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டு தகுதியான பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.

இக் கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் (பொ)பி.பாபு, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் என்.பழனிதேவி, நல்லம்பள்ளி வட்டாட்சியா் பெருமாள், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) அ.மாலா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உ.கௌரி, அரசுத் துறை அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களித்த நடிகர்கள்!

பாஜக ஆதரவு வாக்காளரின் பெயர்கள் நீக்கம்: அண்ணாமலை

நீலக்குயிலே... நீலக்குயிலே! வேதிகா...

வாக்களித்த தலைவர்கள்!

SCROLL FOR NEXT