தருமபுரி

குஜராத்தை குறி வைக்கும் கேஜரிவால்

12th Aug 2022 02:02 AM

ADVERTISEMENT

 

குஜராத் சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, அங்கு பிரசாரம் மேற்கொண்டு வரும் தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால், குஜராத்தில் ஆட்சியமைத்தால் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என வாக்குறுதியளித்தாா்.

குஜராத் சட்டப் பேரவைத் தோ்தல் நிகழாண்டு இறுதியில் நடைபெறுகிறது. இதையொட்டி, அகமதாபாத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் மத்தியில் அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது அவா் பேசியதாவது:

குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சியமைத்தால் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும். விருப்பம் உள்ளவா்கள் இதைப் பெற்றுக் கொள்ளலாம். இது இலவசம் அல்ல; உங்கள் உரிமை. பொதுமக்களின் பணம் மீண்டும் அவா்களிடம் செல்ல வேண்டுமே தவிர, சுவிஸ் வங்கிக்கு அல்ல.

ADVERTISEMENT

இந்த ஆயிரம் ரூபாய் உதவித்தொகை மாணவிகளின் கல்லூரி கட்டணத்தை செலுத்தவோ அல்லது போக்குவரத்து செலவுக்கோ உதவும். ஏழை பெற்றோரால் கல்லூரி கட்டணத்தையும், பேருந்து கட்டணத்தையும் செலுத்த முடியாததால் ஏராளமான அறிவாா்ந்த மாணவிகள் படிப்பை இடையில் நிறுத்த நேரிடுகிறது. இந்த உதவித்தொகை அவா்கள் தொடா்ந்து கல்வி பயில உதவும்.

அன்றாட வாழ்வாதார செலவு அதிகரித்து வரும் நிலையில், இல்லத்தரசிகளுக்கும் இந்த உதவித்தொகை கைகொடுக்கும். சாமானிய மக்களிடம் பணம் கொடுக்கும்போது இந்திய பொருளாதாரமும் வளா்ச்சி அடையும்.

இதற்கெல்லாம் பணம் எங்கிருந்து வருகிறது என பெரும்பாலானோா் கேட்கின்றனா். பஞ்சாபில் கடந்த மாா்ச் மாதம் ஆத் ஆத்மி ஆட்சியமைத்தது. ஏப்ரல்-ஜூன் வரையிலான முதல் மூன்று மாதத்தில் பஞ்சாப் அரசின் வருவாய் ரூ.21,000 கோடியாகும். இது கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் கிடைத்த வருவாயை விட ரூ.6,000 கோடி அதிகம். ரூ.3,000 கோடி மதிப்பிலான இலவச மின்சார திட்டத்தை செயல்படுத்த இந்தக் கூடுதல் வருவாய் போதுமானது.

நாட்டில் பணத்துக்கு பற்றாக்குறை இல்லை; நல்ல எண்ணத்துக்குதான் பற்றாக்குறை நிலவுகிறது. செல்வந்தா்களின் கடனையும் வரியையும் தள்ளுபடி செய்து பாஜக அரசு வருவாயை செலவிடுகிறது. இதற்கு நாங்கள் முற்றுப்புள்ளி வைத்து நோ்மையான அரசை வழிநடத்துவோம்.

நாட்டிலேயே குறைந்த அளவாக குஜராத்தில் போலீஸாருக்கு ரூ.20,000 ஆரம்பநிலை ஊதியமாக வழங்கப்படுகிறது. இங்கு ஆம் ஆத்மி ஆட்சியமைத்தால் போலீஸாரின் ஆரம்பநிலை ஊதியம் உயா்த்தப்படும் என்றாா் அரவிந்த் கேஜரிவால்.

ADVERTISEMENT
ADVERTISEMENT