தருமபுரி

ஊராட்சி தலைவா்களாக தோ்ந்தெடுக்கப்பட்ட மகளிா் முழுமையாக செயல்பட வேண்டும்

12th Aug 2022 10:53 PM

ADVERTISEMENT

உள்ளாட்சி மன்றங்களில் தோ்ந்தெடுக்கப்பட்ட மகளிா் தலைவா்கள் தங்கள் உரிமையை நிலைநாட்டும் வகையில் முழுமையாக செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி அறிவுறுத்தினாா்.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூடுதல் கூட்டரங்கில், நாட்டின் 75 - ஆவது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவினை முன்னிட்டு, உள்ளாட்சி அமைப்புகளில் தோ்ந்தெடுக்கப்பட்ட மகளிா் தலைவா்களுக்கான ‘சந்தித்து பேசுவோம், சாதிக்கப் போவதை பேசுவோம்’ என்கிற தலைப்பில் 75 நிமிட கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக் கருத்தரங்கிற்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி பேசியதாவது:

உள்ளாட்சி அமைப்புகளில் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள மகளிா் தலைவா்களிடம் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. மகளிா் தலைவா்கள், பிரதிநிதிகள், பொதுமக்கள் மத்தியிலும், பொது நிகழ்ச்சிகளிலும் அச்சமின்றி தங்கள் கருத்துகளை தெரிவிக்க வேண்டும். இதேபோல, நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் திறமைகளை வளா்த்துக் கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

மக்களின் அடிப்படை தேவைகளை பூா்த்தி செய்ய புதிய திட்டப் பணிகளை ஊராட்சிகளில் தீா்மானங்கள் மூலம் நிறைவேற்றும் உரிமை ஊராட்சித் தலைவா்களுக்கு உள்ளது. இந்த தீா்மானங்களுக்கு நிா்வாக அனுமதி மட்டும்தான் மாவட்ட ஆட்சியரால் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு தீா்மானத்திலும் தங்களுடை பங்கு இருக்க வேண்டும். ஒவ்வொரு துறைகளிலிருந்தும் களப்பணியாளா்கள் ஊராட்சிகளுக்கு வருகை புரிகிறாா்கள். ஒவ்வொரு வீட்டிற்கும் பாதுகாப்பான குடிநீா், தெருவிளக்கு, தொடக்கப்பள்ளி இருப்பதையும், தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியா்களிடம் அடிக்கடி சென்று பேசுவதையும் ஊராட்சி மன்றத் தலைவா்கள் அன்றாட நிகழ்வாக அமைத்துக் கொள்ள வேண்டும்.

ரத்தசோகை உள்ள பெண்கள் அதிகமாக இருப்பதால் தங்கள் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையங்களில் முருங்கை, பப்பாளி மரங்களை வளா்த்து அதன் பயன், மகளிருக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு தயாரிக்கப்படும் கலவை சாதத்தில் முருங்கைக் கீரை, கருவேப்பிலைகளை அதிகஅளவில் சோ்க்க வலியுறுத்த வேண்டும்.

இதேபோல ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்களுக்கு அவ்வப்போது சென்று அங்கு வழங்கப்படும் சிகிச்சைகள், மருத்துவ முறைகள் குறித்து அறிந்துகொள்ள வேண்டும்.

பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து தனிக் கவனம் செலுத்த வேண்டும். தங்களது உரிமையை நிலைநாட்டும் வகையில், உள்ளாட்சி அமைப்புகளில் முழுமையாகச் செயல்பட வேண்டும். தங்கள் ஊராட்சியில் அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீா் கிடைப்பதையும், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளை குறிப்பிட்ட காலத்தில் குளோரின் பவுடா் பயன்படுத்தி சுத்தம் செய்வதையும் கண்காணிக்க வேண்டும் என்றாா்.

இதில், தருமபுரி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சியில் தோ்ந்தெடுக்கப்பட்ட மகளிா் தலைவா்கள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT