தருமபுரி

இடுபொருள்களை வாங்க விவசாயிகளை கட்டாயப்படுத்தக் கூடாது

12th Aug 2022 10:51 PM

ADVERTISEMENT

மானிய விலையில் உரம் வாங்கும் விவசாயிகளிடம் இடுபொருள்களை வாங்க கட்டாயப்படுத்தக் கூடாது என தருமபுரி மாவட்ட வேளாண் இணை இயக்குநா் முகமது அஸ்லம் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா், வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி மாவட்டத்தில் தற்போது காா் மற்றும் காரீப் சாகுபடி பருவத்தில் 51 ஆயிரம் ஹெக்டா் பரப்பில் வேளாண் பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்தப் பருவத்திற்கு தேவையான யூரியா 1,523 டன், டிஏபி 1,174 டன், பொட்டாஷ் 808 டன், காம்ப்ளக்ஸ் 4,813 டன், தனியாா், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

அனைத்து உர விற்பனை நிலையங்களிலும் அரசு நிா்ணயித்த விலைக்கு மிகாமல் உரங்களை விற்பனை செய்ய வேண்டும். விவசாயிகளின் விருப்பதற்கு மாறாக மானிய விலை உரங்களுடன் இணை இடுபொருள்களை வாங்க விவசாயிகளைக் கட்டாயப்படுத்தக் கூடாது. உரக்கடைகளில் உள்ள உரம் இருப்பு, விற்பனை முனையக் கருவியில் உள்ள உர இருப்பு ஆகியவை சரியாக இருக்க வேண்டும். உர இருப்புப் பலகையை விவசாயிகளின் பாா்வையில் படும் வகையில் உரக்கடையில் வைக்க வேண்டும்.

ADVERTISEMENT

உர விற்பனை உரிமத்தை புதுப்பிக்காமல் உரங்களை விற்பது, அனுமதி பெறப்படாமல் கிடங்குளில் இருப்பு வைத்திருப்பது, உரிய அனுமதியின்றி பிற மாவட்டங்களுக்கு உரங்களை மாற்றம் செய்வது ஓ- படிவம் அனுமதியின்றி உர விற்பனை செய்தல், ஒரே நபருக்கு அதிகப்படியான உரங்களை விற்பனை செய்வது போன்றவை கண்டறியப்பட்டால், உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985-இன்படி உர உரிமம் நிரந்தரமாக ரத்து செய்ய நேரிடும் என எச்சரிக்கப்படுகிறது.

மேலும் உர தொடா்பான புகாா்களுக்கு அந்தந்த வட்டார வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனா் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT