தருமபுரி

இணைய வழி சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும்: எடப்பாடி கே.பழனிசாமி 

9th Aug 2022 01:16 PM

ADVERTISEMENT

தருமபுரி: இணைய வழி சூதாட்டத்தை தடை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவை எதிர்க் கட்சித் தலைவர், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை தருமபுரிக்கு வருகை தந்தார். அவருக்கு அதிமுக அமைப்புச் செயலர், தருமபுரி மாவட்டச் செயலர் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ தலைமையில் அதிமுகவினர் வரவேற்பு அளித்தனர்.

இதைத் தொடர்ந்து எடப்பாடி கே.பழனிசாமி கட்சி தொண்டர்களிடையே பேசியது: 

இணைய வழி சூதாட்டம் இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி, அவர்களின் வாழ்வை பாதிக்கிறது. இந்த சூதாட்டத்தை தமிழக அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும்.  சூதாட்டத்தை தடை செய்வதற்கு மக்களிடம் கருத்துக் கேட்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது சரியல்ல. சூதாட்டம் என்றால் அதனை தடை செய்வதுதான் சரியான நடவடிக்கையாக இருக்கும். 

ADVERTISEMENT

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. தமிழகமெங்கும் போதைப் பொருள்கள் தாரளமாக கிடைக்கிறது. இதனை கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மின் கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு ஆகியவை மக்களை வெகுவாக பாதிக்கிறது. திமுக அரசுக்கு மக்கள் நலனில் அக்கறை இல்லை.
 
தருமபுரி மாவட்டத்தில் அதிமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட எண்ணேகோல்புதூர் தும்பலஅள்ளி அணை இணைப்புக் கால்வாய் திட்டம், அலியாளம் முதல் தூள்செட்டி ஏரி வரையிலான இணைப்புக் கால்வாய் திட்டம் ஆகிய திட்டங்கள் மந்தகதியில் நடைபெறுகிறது.

இதை விரைவாக செயல்படுத்த வேண்டும். அப்போதுதான் இங்குள்ள விவசாயிகள் பெரிதும் பயன்பெறுவர். இதேபோல பாலக்கோடு பகுதியில் ஜெர்தலாவ் கால்வாய் முதல் புலிகரை ஏரிக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். மழைக் காலங்களில் காவிரி ஆற்றில் மிகையாக செல்லும் நீரை தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டம் அதிமுக ஆட்சியில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதையடுத்து, ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அத்திட்டம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 

நீர்ப் பாசனத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டால் தருமபுரி மாவட்டம் செழிப்பான மாவட்டமாக மாறும்.  அதிமுக தலைவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மீது வேண்டுமென்றே திட்டமிட்டு தமிழக அரசு பொய் வழக்குகளைப் பதிவுசெய்து வருகிறது.  இந்த வழக்குகளை எல்லாம் முறியடித்து அதிமுக வீறு கொண்டு எழும்.

திமுகவுடன் கைகோர்த்துக்கொண்டு, அதிமுகவில் இருந்த சிலரின் துரோகச் செயல்களால் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்தது. தற்போது அத்தகையவர்களை அடையாளம் கண்டு விட்டோம். அதிமுக யாராலும் வீழ்த்த இயலாத இயக்கம் என்றார்.

இதையும் படிக்க: கோவாவில் மாநிலக் கட்சியாக அங்கீகாரம்! விரைவில் தேசியக் கட்சியாகிறது ஆம் ஆத்மி?

இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆ.கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி), வே.சம்பத்குமார் (அரூர்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT