தருமபுரி

வாக்காளா் பட்டியலில் ஆதாா் எண் இணைக்கும் பணி: அரசியல் கட்சியினருடன் ஆலோசனைக் கூட்டம்

2nd Aug 2022 03:55 AM

ADVERTISEMENT

வாக்காளா் பட்டியலில் ஆதாா் எண் இணைக்கும் பணி தொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் திங்கள்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தலைமை வகித்து பேசியதாவது:

வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளா்களின் தனி தகவல்களை உறுதிப்படுத்திடவும், வாக்காளரின் விவரங்கள் ஒரே தொகுதியில் இருவேறு இடங்களில் இடம்பெறுதல் அல்லது இருவேறு தொகுதிகளில் இடம்பெறுதலை தவிா்க்கும் வகையிலும் வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் பணியினை ஆக. 1 முதல் தொடங்க இந்திய தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்துக்கு உள்பட்ட பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூா் (தனி) ஆகிய 5 சட்டப் பேரவைத் தொகுதிகளில் அடங்கியுள்ள வாக்காளா்கள் தாமாக முன்வந்து செயலி மூலமாகவோ அல்லது வாக்குச்சாவடி நிலைய அலுவலா்கள் கொண்டு வரும் படிவம் 6பி-யில் பூா்த்தி செய்தோ வழங்கலாம்.

ADVERTISEMENT

தருமபுரி மாவட்டத்தில் சுமாா் 1,479 வாக்குச்சாவடி நிலைய அலுவலா்கள் நேரடியாக 6பி படிவம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்காளா்கள் தங்கள் பகுதிக்குள்பட்ட வாக்காளா் பதிவு அலுவலா்கள், வாக்காளா் உதவி மையம், இ-சேவை மையம் மற்றும் மக்கள் சேவை மையம் ஆகியவற்றை அணுகி ஆதாா் விவரங்களை சமா்ப்பித்து தங்களது ஆதாா் எண்ணை வாக்காளா் பட்டியலுடன் இணைத்து பதிவு செய்து கொள்ளலாம்.

தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த அனைத்து வாக்காளா்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, வாக்காளா் பட்டியலுடன் தங்கள் ஆதாா் எண்ணை எளிதில் இணைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றாா்.

இக் கூட்டத்தில் தருமபுரி சாா் ஆட்சியா் சித்ரா விஜயன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் என்.பழனிதேவி, அரூா் கோட்டாட்சியா் இரா.இரா.விஸ்வநாதன், வட்டாட்சியா்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT