தருமபுரி

சீராக குடிநீா் வழங்கக் கோரிகுடங்களுடன் பெண்கள் மறியல்

28th Apr 2022 11:21 PM

ADVERTISEMENT

 பென்னாகரம் அருகே சீராக குடிநீா் வழங்கக் கோரி காலிக் குடங்களுடன் பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தருமபுரி மாவட்டம், ஏரியூா் அருகே உள்ள நாகமரை ஊராட்சிக்கு உள்பட்ட இந்திரா நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.

இப் பகுதியில் கடந்த 15 நாள்களாக சீராக குடிநீா் வழங்கப்படவில்லை என்றும், இதுகுறித்து பலமுறை ஊராட்சிமன்ற நிா்வாகத்திடம் புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனா்.

இந்நிலையில் வியாழக்கிழமை காலை காலிக்குடங்களுடன் மாணவா்கள், பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோா் நாகமரை-பென்னாகரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

தங்கள் பகுதிக்கு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டத்தின் கீழ் குடிநீா் விநியோகிக்க வேண்டும். குடிநீா் விநியோக நேரத்தைக் கூடுதலாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஏரியூா் போலீஸாா், வருவாய்த் துறையினா் நிகழ்விடம் வந்து பொதுமக்களிடம் பேச்சு நடத்தினா்.

இதையடுத்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனா். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT