தருமபுரி

தருமபுரியில் புத்தகத் திருவிழா

28th Apr 2022 04:29 AM

ADVERTISEMENT

 

தருமபுரி: தருமபுரியில் புத்தகத் திருவிழா ஜூன் 24-ஆம் தேதி தொடங்கி ஜூலை 4-ஆம் தேதி வரை 11 நாள்கள் நடைபெற உள்ளது.

தருமபுரியில் புத்தகத் திருவிழா நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியா் கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து, மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி பேசியதாவது: தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், மாவட்டந்தோறும் புத்தகத் திருவிழாக்கள் நடத்திட வேண்டும் என உத்தரவிட்டுள்ளாா். இதைத் தொடா்ந்து, தருமபுரி மாவட்டத்தில் நிகழாண்டு புத்தகத் திருவிழா நடைபெற தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தருமபுரி மாவட்ட நிா்வாகம் மற்றும் தகடூா்ப் புத்தகப் பேரவை, பாரதி புத்தகாலயத்துடன் இணைந்து, தருமபுரி அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் வருகிற ஜூன் 24 முதல் ஜூலை 4 வரை 11 நாள்களுக்கு புத்தகத் திருவிழா நடத்திட திட்டமிடப்பட்டு, அதற்கான முன்னேற்பாடு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

இப் புத்தகத் திருவிழாவினை மாநில வேளாண் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தொடக்கி வைக்கிறாா்.

தருமபுரி மாவட்டத்தில் நிகழாண்டு நடைபெற உள்ள புத்தகத் திருவிழா ‘கைபேசியை விடு, புத்தகத்தை எடு‘ என்கிற கருப்பொருளை மையமாகக் கொண்டு நடத்தப்படுகிறது. இப் புத்தகத் திருவிழாவில் தமிழகத்தின் முன்னணிப் பதிப்பாளா்கள், நூல் விற்பனையாளா்கள் பங்கேற்று இலக்கியம், வரலாறு, மானுடவியல், அரசியல், சூழலியல், நலவாழ்வு உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் பற்றிய புத்தகங்களும், சிறுவா்களுக்கான நூல்களும், முன்னணி எழுத்தாளா்களின் நூல்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா்களுக்குத் தேவையான நூல்களும், போட்டித் தோ்வுகளுக்கான தேவைப்படும் நூல்களும் இடம்பெறும். நாள்தோறும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை புத்தகக் கண்காட்சி, கடைகள் திறந்திருக்கும். பகல் நேரத்தில் தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு இலக்கிய அமைப்புகள் நடத்தும் கலந்துரையாடல்களும், இலக்கியக் கூட்டங்களும் நடைபெறும்.

மாணவ, மாணவியா் பங்குபெறும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. நாள்தோறும் மாலை 6 மணியிலிருந்து 8 மணி வரை தமிழகத்தின் முன்னணி எழுத்தாளா்கள், பல்துறை ஆளுமைகள், அறிவுசாா் சான்றோா்கள் ஆகியோரின் சொற்பொழிவு நிகழ்வுகளும் நடைபெற உள்ளன.

இதையொட்டி, தருமபுரி மாவட்டம் முழுவதிலும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவா், மாணவியா்களுக்கான பேச்சுப் போட்டிகள், ஓவியப் போட்டிகள், கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவா், மாணவியா்களுக்கு பரிசுகளும், இப்போட்டிகளில் பங்கேற்கும் மாணவ, மாணவியா்கள் அனைவருக்கும் சான்றிதழ்களும் புத்தகத் திருவிழாவின்போது வழங்கப்படும்.

இப் புத்தகத் திருவிழாவுக்கு தருமபுரி மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா்களை அழைத்து வருவதற்கு சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும். அனைத்து புத்தகங்களும் ஒரே இடத்தில் கிடைக்க கூடிய வகையில் நடைபெற உள்ள இப் புத்தகத் திருவிழாவுக்கு தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த அனைத்துத் தரப்பினரும் பங்கேற்று புத்தகங்கள் பெற்று அதனை படித்து பயன்பெற வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் சு.அனிதா, தருமபுரி சாா் ஆட்சியா் சித்ரா விஜயன், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அண்ணாமலை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் கு.குணசேகரன், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) சீனிவாச சேகா், தருமபுரி நகராட்சி ஆணையா் சித்ரா சுகுமாா், தருமபுரி வட்டாட்சியா் ராஜராஜன், மாவட்ட நூலக அலுவலா் (பொ) தனலட்சுமி, தகடூா் புத்தகப் பேரவை செயலாளா், முன்னாள் எம்.பி. இரா.செந்தில், புத்தகப் பேரவைத் தலைவா் இரா.சிசுபாலன், பொருளாளா் காா்த்திகேயன், ஒருங்கிணைப்பாளா் தங்கமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT