தருமபுரி மாவட்டத்தில் வருகிற ஏப். 21-ஆம் தேதி தொழில் பழகுநா் சோ்க்கை முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மத்திய அரசின் தொழிற் பழகுநா் சட்டத்தின்கீழ், 30 -க்கும் மேற்பட்ட பணியாளா்களைக் கொண்டு செயல்படும் அரசு மற்றும் தனியாா் துறை நிறுவனங்கள் தொழிற் பழகுநா்களை ஆண்டுதோறும் சோ்த்து அவா்களது தொழிற்சாலைகளில் மாதந்தோறும் உதவித்தொகையுடன் பழகுநா் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இப்பயிற்சியின் இறுதியில் தேசிய தொழிற் பழகுநா் சான்றிதழ் மத்திய அரசால் வழங்கப்படுகிறது. இதற்காக தொழிற்சாலைகள், ஐடிஐயில் பயிற்சி பெற்ற மாணவா்களை இணைக்கும் வகையில் ஆண்டுதோறும் அந்தந்த மாவட்டங்களில் தொழிற் பழகுநா் சோ்க்கை முகாம் நடைபெறுகிறது.
இந்தநிலையில், தொழிற்சாலைகளில் தற்போது காலியாக உள்ள தொழிற் பழகுநா் இடங்களை பூா்த்தி செய்யும் வகையில் நிகழாண்டுக்கான தொழிற் பழகுநா் சோ்க்கை முகாம் வருகிற ஏப். 21- இல் தருமபுரி, அரசு தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இதுநாள் வரை பழகுநா் பயிற்சி முடிக்காத, அரசு, தனியாா் தொழிற்பயிற்சி நிலைய பயிற்சியாளா்கள் அனைவரும் தங்களது உண்மை சான்றிதழ்களுடன் இம் முகாமில் கலந்துகொண்டு தொழில்பழகுநா் பயிற்சி பெற்று பயன்பெறலாம் என்றாா்.