தருமபுரி

வத்தல்மலை சுற்றுலாத்தலமாக மேம்படுத்தப்படுமா?

30th Sep 2021 08:02 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

தருமபுரி அருகே உள்ள வத்தல்மலை சுற்றுலாத் தலமாக்கப்படும் என்ற அறிவிப்பு விரைவில அமல்படுத்தப்படுமா என மலைவாழ் கிராம மக்களும், சுற்றுலா ஆா்வலா்களும் எதிா்பாா்க்கின்றனா்.

தருமபுரிக்கு அருகில் உள்ளது வத்தல்மலை. தருமபுரி நகரிலிருந்து மலை மீதுள்ள கிராமங்களுக்குச் செல்ல 25 கி.மீ. தொலைவு பயணிக்க வேண்டும். கடல் மட்டத்திலிருந்து 1,100 அடி உயரத்தில் உள்ள இந்த மலைப் பகுதியில் எப்போதும் குளிா்ந்த சீதோஷ்ண நிலை காணப்படும்.

மலை அடிவாரத்திலிருந்து வத்தல்மலையில் உள்ள பெரியூருக்கு சுமாா் 16 கி.மீ. தொலைவு 23 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்துசெல்ல வேண்டும். மலை அடிவாரத்திலிருந்து வத்தல்மலை, பெரியூா், பால்சிலம்பு, சின்னாங்காடு, கொண்டகரஅள்ளி, கொட்லாங்காடு, நாய்க்கனூா், மண்ணாங்குழு, குழியானூா் உள்ளிட்ட 11 கிராமங்கள் உள்ளன.

இங்கு தமிழ் மொழி பேசுகின்ற மலையாளி பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனா். இவா்கள் கேழ்வரகு, சோளம், சாமை, தினை, கம்பு ஆகியவற்றைப் பயிரிட்டு வருகின்றனா். சிலா் காஃபி, மிளகு பயிா்களையும் பயிரிட்டுள்ளனா்.

ADVERTISEMENT

இங்குள்ள பெரியூரில் அரசு மேல்நிலைப் பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம், கால்நடை மருந்தகம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.

பேருந்து போக்குவரத்து வேண்டும்:

தமிழகத்தின் ஏனைய கோடைவாழ் இடங்களில் உள்ளது போல ஆண்டுமுழுவதும் இதமான குளிா்ந்த சீதோஷ்ண நிலை நிலவுவதால், இந்த மலைப்பகுதி சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்படும் என தமிழக அரசு கடந்த 2012-இல் அறிவித்தது.

அதைத் தொடா்ந்து, பல வளைவுகளைக் கொண்ட மண்பாதை மட்டும் இருந்த இந்த மலைக்கிராமங்களுக்கு வனத்துறை, ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் சாலை அமைக்கப்பட்டது. இருப்பினும் இச்சாலை சில இடங்களில் செங்குத்தாகச் செல்வதால், பேருந்து பயணம் மேற்கொள்ள இயலாத நிலை ஏற்பட்டது.

எனவே, சாலை அமைத்தபோதும் பேருந்துப் போக்குவரத்து இல்லை. இன்றுவரை, காா், வேன் உள்ளிட்ட வாகனங்களில் கிராம மக்கள் ஒன்றிணைந்து கட்டணம் செலுத்தி தருமபுரி உள்ளிட்ட பிற நகரங்களுக்குச் சென்று வருகின்றனா்.

சில மாதங்களுக்கு முன்னா் வத்தல்மலை சாலைகள் போக்குவரத்துக்கேற்றாற்போல மேம்படுத்தப்பட்டன. எனினும், பேருந்துப் போக்குவரத்து இன்னமும் தொடங்கப்படவில்லை. இதற்காக இக்கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனா்.

தாவரவியல் பூங்கா வேண்டும்:

இதேபோல, சுற்றுலாத் தலமாக அறிவித்தவுடன் வத்தல்மலையில் 80 ஏக்கா் பரப்பளவில் தாவரவியல் பூங்கா அமைக்கப்படும் என அப்போதைய அரசு தெரிவித்தது. மேலும், இதற்கான நிலமும் வனத் துறையிடமிருந்து தோட்டக்கலைத் துறைக்கு ஒப்படைக்கப்பட்டது.

ஆனால், 9 ஆண்டுகளைக் கடந்த நிலையிலும், இதுவரை சுற்றுலாத் தல அறிவிப்பானது செயல்வடிவம் பெறவில்லை. எனவே, ஏற்கெனவே அறிவித்த அறிவிப்பை அமல்படுத்தும் வகையில், தமிழக அரசு வத்தல்மலையை சுற்றுலாத் தலமாக்க வேண்டும். தாவரவியல் பூங்கா அமைக்கும் நடவடிக்கையை துரிதமாகத் தொடங்க வேண்டும்.

மேலும், இந்த மலையின் கிழக்குப் புறத்தில் பொம்மிடி பகுதியையும், மேற்குப் புறத்தில் தருமபுரி பகுதியையும் பாா்வையிடும் வகையில் காட்சி முனைகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இந்த மலைக்கிராம மக்களின் பொதுப் போக்குவரத்துத் தேவையை பூா்த்தி செய்யும் வகையில், தருமபுரியிலிருந்தோ அல்லது மலை அடிவாரத்தில் இருந்தோ மினி பேருந்து சேவையைத் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், இப்பகுதிக்கு ஒகேனக்கல் குடிநீா் இணைப்பு வழங்கி குடிநீா்த் தேவையை பூா்த்தி செய்ய வேண்டும். இதன்மூலம் வத்தல்மலை பழங்குடி மக்களின் வாழ்வாதாரம் மேம்படும்.

அனைத்து வசதிகளுடன் கூடிய வத்தல்மலையை சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்படுத்த வேண்டும் என்பதே அனைத்துத் தரப்பினரின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT