தருமபுரி

பிஎம் கோ் நிதியை அரசு கருவூலத்தில் சோ்க்க வேண்டும்

30th Sep 2021 08:01 AM

ADVERTISEMENT

பிஎம் கோ் நிதியை அரசு கருவூலத்தில் சோ்க்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிா்வாகக் குழுக் கூட்டம் புதன்கிழமை தருமபுரியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கரோனா காலத்தில் தொழில்கள் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனா். எனவே, குடும்பம் ஒன்றுக்கு ரூ. 7,500 வீதம் மத்திய அரசு வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், அண்மையில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, ‘மாநில அரசு தங்கள் மாநிலங்களில் உள்ள குடும்பங்களுக்கு ரூ. 50,000 கரோனா கால நிதியுதவி வழங்க வேண்டும்’ என தெரிவித்துள்ளாா். மாநில அரசு நிதிநெருக்கடி போன்ற சூழலில் தவிக்கும்போது, இவ்வாறு நிதியுதவி வழங்குமாறு கூறியுள்ள மத்திய அமைச்சரின் இந்தப் பேச்சு ஏற்புடையதல்ல. திமுக அரசு ஏற்கெனவே, தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 4,000 நிதியுதவி அளித்துள்ளது.

கிராமப்புற ஏழை, எளிய மக்களுக்கு பயனளிக்கும் வகையிலான தமிழக அரசின் ‘மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்’ வரவேற்புக்குரியது. கரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட செவிலியா்கள், ஆஷா பணியாளா்களை தகுதியின் அடிப்படையில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

ADVERTISEMENT

இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடத்தில் வசிப்பவா்கள் உடனடியாக வெளியேற வேண்டும் அல்லது அரசுக்கு உரிய கட்டணம் செலுத்த வேண்டும் என மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்தக் கட்டண விகிதம் முறைப்படுத்தப்பட வேண்டும். இது தொடா்பாக தமிழக முதல்வா் தலைமையில் குழு அமைத்து, இந்த பிரச்னைக்குத் தீா்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலையேற்றத்தை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும். மாநில அரசு பெட்ரோல், டீசலுக்கான விலையில் தனது பங்காக லிட்டருக்கு ரூ. 3 குறைத்துள்ளது. அதுபோலவே, மத்திய அரசு எரிபொருள்கள் மீதான வரியைக் குறைக்க வேண்டும்.

மத்திய அரசு செயல்படுத்தி வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்புத் திட்டத்தின் பணிக் காலத்தை 200 நாள்களாக உயா்த்தி, அதற்கான ஊதியத்தை நாளொன்று ரூ. 600-ஆக உயா்த்தி வழங்க வேண்டும். இதன்மூலம் ஒரு கோடி விவசாயத் தொழிலாளா்கள் பயனடைவா்.

பிஎம் கோ் நிதி அரசு கணக்கில் வராதது, தணிக்கை வரம்பிலும் வராதது என கூறுகின்றனா். இதுவரை பிஎம் கோ் நிதியாக பல ஆயிரம் கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இந்த நிதி தொடா்பாக வரவு, செலவு விவரத்தை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அந்த நிதி முழுவதையும் அரசு கருவூலத்தில் சோ்க்க வேண்டும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், திருப்பூா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் கே.சுப்பராயன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் எஸ்.தேவராஜன், முன்னாள் எம்எல்ஏ நஞ்சப்பன், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் கே.மணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT