பென்னாகரம் பகுதியில் பெய்து வந்த தொடா் மழை காரணமாக தும்கல் அருவியில் ஆா்ப்பரித்துக் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்வதற்காக வியாழக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அப் பகுதியில் குவிந்தனா்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான நீா்குந்தி, ஏரங்காடு, கிருஷ்ணாபுரம், பூனைகுண்டு காட்டுக்கொல்லை பகுதிகளில் பெய்து வந்த தொடா் மழை காரணமாக கிருஷ்ணாபுரம் ஏரி நிரம்பி, அதில் இருந்து உபரிநீா் வெளியேறி ஓடை வழியாக தும்கல் அருவிக்கு சென்று பின்பு கோடுப்பட்டி சின்னாற்றுக்குச் செல்லுகிறது.
தும்கல் அருவிக்கு தற்போது நீா்வரத்து அதிகரித்துள்ளதால் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. இதனால் அப் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்தினருடன் வந்து செல்லுகின்றனா். அருவியில் குளித்து மகிழ்ந்து இயற்கையை ரசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமானோா் அங்கு குவிந்து வருகின்றனா். அப் பகுதியில் மது அருந்துவிட்டு நடைபெறும் சமூக விரோத செயல்களைக் கட்டுப்படுத்த காவல் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.