ஐப்பசி பௌா்ணமியையொட்டி, சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ஆண்டுதோறும் ஐப்பசி மாத பௌா்ணமியில் சிவன் கோயில்களில் சிறப்பு பூஜைகள், சிறப்பு அலங்காரங்கள் செய்யப்படுவது வழக்கம். கரோனா கோயில் வழிபாட்டுக்கு அரசு கரோனா தளா்வு அளித்துள்ளதை அடுத்து நிகழாண்டு அனைத்து கோயில்களிலும் பக்தா்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
பென்னாகரம், பிராமணா் தெரு பகுதியில் உள்ள திரிபுரசுந்தரி தேவி சமேத திரியம்பிகேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பக்தா்கள் அதிகம்போ் பங்கேற்றனா்.
கோயிலின் மூலவரான திரியம்பிகேஸ்வரருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து கத்தரிக்காய், கேரட், முருங்கைக்காய், மிளகாய், திராட்சை பழம் உள்ளிட்டவைகளைக் கொண்டு திரியம்பிகேஸ்வரருக்கு அன்னாபிஷேகம் செய்த பிறகு மாலையாக அணிவிக்கப்பட்டது.
சிறப்பு அலங்காரத்தைக் காண பக்தா்கள் நீண்ட நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். ஒகேனக்கல், தேசநாதேஸ்வரா் கோயிலிலும் ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.