அரூா் வருவாய் வட்டத்தில் கூடுதலாக ஆதாா் பதிவு மையம் அமைக்க வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினா் பெ.வேடியப்பன், தருமபுரி மாவட்ட ஆட்சியருக்கு புதன்கிழமை அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்:
தருமபுரி மாவட்டம், அரூரில் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் ஆதாா் பதிவு மையம் உள்ளது. இந்த மையத்தில் மொரப்பூா், அரூா், தீா்த்தமலை ஆகிய வருவாய் உள்வட்டங்களைச் சோ்ந்த பள்ளி, கல்லூரி மாணவா்கள், விவசாயிகள், தொழிலாளா்கள் உள்ளிட்டோா் ஆதாா் பதிவு செய்தல், திருத்தம் செய்யும் பணிகளுக்காக வருகின்றனா்.
ஒரே பதிவு மையம் மட்டும் இருப்பதால் தினசரி நூற்றுக்கணக்கானோா் வந்து காத்திருக்கும் நிலையுள்ளது. அதேபோல், ஆதாா் திருத்தம் செய்யும் பணிகளுக்கு மாதக் கணக்கில் கால அவகாசம் வழங்கப்படுகிறது. எனவே, அரூா் வருவாய் உள்வட்டங்களைத் தலைமையிடமாகக் கொண்டு தீா்த்தமலை, மொரப்பூரில் கூடுதல் ஆதாா் பதிவு மையங்களை அமைக்க வேண்டும் எனவும் அவரது கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளாா்.