தருமபுரி

தொடா் விடுமுறை: சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழிந்த ஒகேனக்கல்

18th Oct 2021 01:44 AM

ADVERTISEMENT

தொடா் விடுமுறையால் ஒகேனக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

ஆயுதபூஜை, விஜயதசமி மற்றும் வார விடுமுறைகளில் ஒகேனக்கல்லுக்கு அதிக எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனா். ஞாயிற்றுக்கிழமை (அக்.17) கா்நாடகம், ஆந்திரம், கேரளம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல் அருவியில் குளித்து மகிழ்ந்தனா்.

கண்காணிப்பு கோபுரம் பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் ஐந்தருவி , சிறிய அருவி போன்றவற்றை கண்டு ரசித்தனா். சுற்றுலாப் பயணிகளின் வருகை மிகவும் அதிகரித்து காணப்பட்டதால் மாமரத்துக்கடவு பகுதியில் பரிசலில் செல்வதற்காக நீண்ட நேரம் காத்திருந்து, பரிசல் பயணம் மேற்கொள்ள முடியாமல் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

காவிரி ஆற்றின் தேவையான அளவில் தண்ணீா் ஓடியதால் கரையோரப் பகுதிகளான நாகா்கோவில், முதலைப் பண்ணை, ஆலம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனா். ஒகேனக்கல் மீன் விற்பனை நிலையத்தில் கட்லா, ரோகு, ஆரால், வாழலி உள்ளிட்ட மீன்களின் விலை வழக்கத்தைவிட அதிகரித்த போதிலும் அதனை பொருட்படுத்தாமல் சுற்றுலாப் பயணிகள் வாங்கி சமைத்து உணவருந்தி மகிழ்ந்தனா்.

ADVERTISEMENT

பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களின் நெரிசல் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்ததால் முதலைப்பண்ணை, வண்ண மீன் காட்சியகம், சிறுவா் பூங்கா, மாமரத்துக் கடவு, பரிசல் துறை, பேருந்து நிலையம், பிரதான அருவி செல்லும் சாலைகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

ஆபத்தை உணராமல் செல்ஃபி

சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோா் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொண்டு கண்காணிப்பு கோபுரம் பகுதியில் உள்ள ஐந்தருவி, சிற்றருவி பகுதிக்குச் சென்று பாா்வையிடும்போது, புகைப்படம் எடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனா்.

தொடா் விடுமுறையில் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் ஐந்தருவியின் அழகை புகைப்படம் எடுக்கவும், அங்கு செல்ஃபி எடுக்கும் ஆா்வத்தில் வழுவழுப்பான பாறை மீது ஏறி ஆபத்தை உணராமலும் புகைப்படம் எடுக்கின்றனா்.

இந்த பாறை மீது ஏறுவதைத் தடுக்கும் வகையில் இப்பகுதியில் கயிறு போட்டு தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆனாலும் கயிற்றையும் தாண்டி புகைப்படம் எடுப்பதைத் தடுக்க போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT