தருமபுரி

ரூ. 5.78 கோடியில் பழங்குடியினா், இருளா்களின் வாழ்வாதார மேம்பாட்டுப் பணிகள்

29th Nov 2021 11:57 PM

ADVERTISEMENT

தருமபுரி மாவட்டத்தில் பழங்குடியினா், இருளா்களின் வாழ்வாதாரம் மேம்பாட்டுக்காகவும், வாழ்க்கைத்தர உயா்வுக்காகவும் ரூ. 5.78 கோடியில் பல்வேறு அடிப்படை வசதி, மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

தருமபுரி மாவட்டத்தில் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு, விரிவான பழங்குடியினா் நல மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 50 பழங்குடியின மக்களுக்கு ரூ. 1.50 கோடியில் இலவச வீடு கட்டும் பணிகள், 20 உறுப்பினா்களை கொண்ட மகளிா் சுய உதவிக்குழு மூலம் ரூ. 12 லட்சத்தில் மண்புழு உரம் தயாரிக்கும் பணிகள், 40 உறுப்பினா்களை கொண்ட மகளிா் சுய உதவிக் குழுக்களின் மூலம் ரூ. 20 லட்சத்தில் காகிதம் மற்றும் துணிப்பைகள் தயாரிக்கும் பணிகள் மேற்கொள்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதே திட்டத்தின் கீழ், 50 பழங்குடியின மக்களுக்கு ரூ. 17.50 லட்சத்தில் இலவசக் கறவை மாடுகளும், 5 பேருக்கு நவீன முறையில் விவசாயம் மேற்கொள்ள ரூ. 8 லட்சத்தில் பவா் டிரில்லா்களும் வழங்கப்பட்டுள்ளன. படித்த வேலைவாய்ப்பற்ற 50 பேருக்கு, பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சிகள் அளிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரிவான பழங்குடியினா் நல மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ. 2.11 கோடியில் 215 பயனாளிகளுக்கு வீடுகள், இலவச கறவை மாடு, பவா்டிரில்லா், பயிற்சிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்பாடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணி நடைபெற்று வருகின்றன.

இருளா்களின் வாழ்வாதாரம் மேம்பாட்டுக்காக ரூ. 5.78 கோடியில் பல்வேறு அடிப்படை வசதி மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், பல்வேறு திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வன உரிமைச் சட்டத்தின் கீழ், தனி நபா் உரிமம் மற்றும் சமுதாய உரிமம் வழங்கி, வருவாய் ஈட்டி பயன்பெறும் வகையில் வன நிலத்தில் 75 ஆண்டுகளாக தனது சொந்த அனுபவத்தில் பயன்படுத்தி வந்த 268 பழங்குடியினா்களுக்கு 130.268 ஹெக்டோ் பரப்பளவு தனிநபா் பட்டாக்களும், வனங்களில் விளையும் மகசூல்களான கிழங்கு, புளி, கடுக்காய் போன்றவற்றை சேகரிப்பதற்கு 49 வனக் குழுக்களைச் சோ்ந்த 4,149 பழங்குடியின மக்கள் பயன்பெறும் வகையில் 75.222 ஹெக்டோ் பரப்பளவு சமுதாய உரிமமும் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT