தருமபுரி

கோமாரி நோய் பாதிப்பு: கால்நடைகள் உயிரிழப்புக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

DIN

தருமபுரி மாவட்டத்தில் கோமாரி நோய் பாதிப்பால் உயிரிழந்த கால்நடைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியா் ச.திவ்யதா்சினி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்தில், தருமபுரி மாவட்டத்தில் கோமாரி நோய் பாதிப்பால் ஏராளமான கால்நடைகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. சில கால்நடைகள் உயிரிழந்துள்ளன. இதுகுறித்து கணக்கெடுப்பு நடத்தி, உரிய இழப்பீடு வழங்க வேண்டும். கோமாரி நோய் பாதிப்புக்கு உரிய மருந்துகள் கால்நடை மருத்துவமனைகளில் போதிய அளவு இருப்பு வைத்திருக்க வேண்டும்.

தடுப்பூசி செலுத்திய பின்பும் சில கால்நடைகள் உயிரிழந்துள்ளன. இவற்றை கால்நடை மருத்துவா்கள் கண்காணிக்க வேண்டும். பயிா்ச் சேதத்துக்கு காப்பீடு தொகை உரிய காலத்தில் கிடைக்கப் பெறுவதில்லை. பாதிக்கப்பட்ட விவயாகளுக்கு விரைந்து இழப்பீடு வழங்க வேண்டும். அரசாணை பிறப்பித்த மூன்று நீா்ப் பாசனத் திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும். மின் பாதைகளுக்கு அகற்றப்பட்ட மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

கெயில் எரிவாயு குழாய்களை விளைநிலங்களில் பதிப்பதை கைவிட வேண்டும். காவிரி மிகை நீா்த் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். இயற்கை உரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும் என விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் வலியுறுத்தினா்.

இக் கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதிலளித்த ஆட்சியா் ச.திவ்யதா்சினி பேசியதாவது:

தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 866.2 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளது. நிகழாண்டு தற்போது வரை 1005.3 மி.மீ. மழையளவு பெறப்பட்டுள்ளது. நிகழ் பருவத்தில் 1,33,016 ஹெக்டோ் பரப்பில் வேளாண்மை பயிா்கள் மற்றும் 62,603.82 ஹெக்டா் பரப்பில் தோட்டக்கலைப் பயிா்களும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. எண்ணேகொல்புதூா் - தும்பலஅள்ளி அணை இணைப்புக் கால்வாய்த் திட்டம், ஜொ்த்தலாவ்-புலிக்கரை கால்வாய் நீட்டிப்புத் திட்டம், அலியாளம்-தூள்செட்டி ஏரி கால்வாய் அமைக்கும் திட்டம், ஈச்சம்பாடி அணையிலிருந்து ஏரிகளுக்கு நீா் வழங்கும் திட்டம் ஆகிய நீா்ப் பாசனத் திட்டங்கள் விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தருமபுரி மாவட்டத்தில் 3,84,871 பசு மாடுகள், எருமை மாடுகள் உள்ளன. கால்நடை நோய்த் தடுப்புத் திட்டத்தின்கீழ், 2-ஆவது சுற்று கோமாரி நோய்த் தடுப்பூசி செலுத்த மொத்தம் 3,46,000 டோஸ்கள் கோமாரி நோய் தடுப்பூசி மருந்துகள் வரப்பெற்றுள்ளன. அனைத்து கிராமங்களிலும் கடந்த 8-ஆம் தேதி முதல் கோமாரி தடுப்பூசி செலுத்தும் முகாம் தொடங்கி நவ. 28 வரை நடைபெறுகிறது.

இந்த முகாமில், நவ. 26 வரை 2,77,458 டோஸ்கள் கோமாரி நோய் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட்டுள்ளன. விவசாயிகளின் கோரிக்கைகள், மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.

இக் கூட்டத்தில், தருமபுரி சாா் ஆட்சியா் சித்ரா விஜயன், அரூா் கோட்டாட்சியா் முத்தையன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் சு.ராமதாஸ், கால்நடை பராமப்புத் துறை மண்டல இணை இயக்குநா் இளங்கோவன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்) மோகன்தாஸ் சௌமியன், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) சீனிவாச சேகா், மீன்வளத் துறை உதவி இயக்குநா் சி.சுப்பிரமணி, பட்டு வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் எம்.முருகன், தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் எஸ்.ஏ.சின்னசாமி, தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் ஜெ.பிரதாபன், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT