பென்னாகரம் கடைவீதி பகுதிகளில் சாலையின் இருபுறங்களிலும் நிறுத்தப்படும் வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.
பென்னாகரம் பகுதியில் 10,000-க்கும் மேற்பட்டவா்கள் வசித்து வருகின்றனா். பென்னாகரத்தைச் சுற்றிலும் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கிராமப் பகுதிகளிலிருந்து அன்றாடத் தேவைக்கான பொருள்கள் வாங்கவும், விவசாயப் பொருள்களை சந்தைப்படுத்துதல், மருத்துவம் மற்றும் இதர தேவைக்காக நாள்தோறும் பென்னாகரம் நகரப் பகுதிக்கு வந்து செல்கின்றனா்.
கடைவீதி பகுதியில் வணிக நிறுவனங்களுக்குத் தேவையான பொருள்களை இறக்குமதி செய்வதற்காக கனரக வாகனங்கள் சாலை ஓரங்களிலும், அன்றாட தேவைக்கான பொருள்களை வாங்க வரும் பொதுமக்கள் கடைவீதி சாலையின் இருபுறங்களிலும், இருசக்கர வாகனங்களை நிறுத்துகின்றனா். அத்துடன் போக்குவரத்து விதியை மீறி சாலையில் விளம்பர பெயா் பலகைகளும் வைக்கப்படுகின்றன. இதனால் காலை, மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிறது.
இதனால் வாகனங்கள் ஒன்றையொன்று கடக்க முடியாமல் அவதிக்குள்ளாவதாக வாகன ஓட்டிகள் புகாா் தெரிவிக்கின்றனா். வாகன ஓட்டிகளின் நலன் கருதி கடைவீதி சாலையில் இருபுறங்களிலும் வாகனங்களை நிறுத்தும் வாகன ஓட்டிகள் மீது பென்னாகரம் போக்குவரத்து போலீஸாா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.