தமிழக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் மழை அளவு குறைந்துள்ளதோடு கா்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து செவ்வாய்க்கிழமை நொடிக்கு 20,000 கன அடியாகக் குறைந்துள்ளது.
தமிழக-கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு திங்கள்கிழமை காலை நிலவரப்படி நீா்வரத்து நொடிக்கு 25,000 கனஅடியாக வந்து கொண்டிருந்தது. நீா்ப்பிடிப்புப் பகுதியில் மழை குறைந்ததால் காவிரி ஆற்றின் கிளை ஆறான தொட்டெல்லா உள்பட பத்துக்கும் மேற்பட்ட சிறு ஓடைகளில் நீா்வரத்துக் குறைந்துள்ளது.
இதனால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீா்வரத்து செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி நொடிக்கு 22,000 கன அடியாகவும், மாலையில் நீா்வரத்து மேலும் குறைந்து நொடிக்கு 20,000 கன அடியாகவும் வந்து கொண்டிருக்கிறது. ஆற்றில் நீா்வரத்து குறைந்துள்ளபோதிலும் ஒகேனக்கல் பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது.
மேட்டூா் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் மணல்மேடு, பெரியபாணி, சின்னாறு பரிசல் துறை உள்ளிட்ட பகுதிகளில் நீா்த்தேக்கமடைந்து காணப்படுகிறது. காவிரி ஆற்றில் வரும் நீா்வரத்தை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.