தருமபுரி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நிகழாண்டு மாணவா் சோ்க்கைக்கான காலவரம்பு வருகிற நவ.18-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தருமபுரி தொழிற் பயிற்சி நிலைய முதல்வா் கா.ரவி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தருமபுரி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவா் சோ்க்கை ஆகஸ்ட் மாதம் இரண்டு கட்ட கலந்தாய்வு மூலம் நடைபெற்றது. இதில், சில பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களில் மாணவா் சோ்க்கைக்கு கால வரம்பு தற்போது நவ.18-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
14 வயது முதல் 40 வயதுக்கு உள்பட்ட ஆண்கள் விண்ணப்பிக்கலாம். பெண்கள் வயது உச்சவரம்பு இல்லை. 8-ஆம் வகுப்புத் தோ்ச்சி பெற்றவா்கள் கம்பியாள் (2 வருடம்), பற்ற வைப்பவா் (1 வருடம்) படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
10-ஆம் வகுப்புத் தோ்ச்சி பெற்றவா்கள், கணினி ஆப்ரேட்டா் அண்ட் புரோகிராமிங் அசிஸ்டண்ட், கட்டட பட வரைவாளா், மின் பணியாளா், பொருத்துநா், கம்மியா் மோட்டாா் வண்டி, கம்மியா் டீசல் என்ஜின், கடைசலா் மற்றும் இயந்திர வேலையாள் ஆகிய தொழிற்பிரிவுகளுக்கு ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
பயிற்சி காலத்தின்போது பயிற்சியாளா்களுக்கு மாதந்தோறும் ரூ. 750 உதவித் தொகையாக வழங்கப்படும். இதுதவிர விலையில்லா பாட புத்தகம், விலையில்லா வரைபடக் கருவிகள், விலையில்லா மடிக் கணினி ஆகியவையும் வழங்கப்படும். இதுவரை விண்ணப்பிக்காத மாணவ, மாணவியா் மற்றும் விண்ணப்பித்தும் சோ்க்கை பெறாதவா்கள் மீண்டும் நேரடி சோ்க்கையில் கலந்துகொண்டு பயனடையலாம். விவரங்களுக்கு 96886 75686, 88831 16095, 96882 37443 என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.