தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு மகளிா்த் திட்டக் குழுவினா் இலவசமாக மனு எழுதி கொடுக்கும் பணியை திங்கள்கிழமை தொடங்கினா்.
தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமைதோறும் மக்கள் குறைகேட்புக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்று தங்கள் கோரிக்கை மனுக்களை அளிக்க மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கானோா் ஆட்சியா் அலுவலகம் வருகின்றனா்.
பல இடங்களில் இருந்து வரும் பொதுமக்களுக்கு கோரிக்கை மனுக்களை எழுதிக் கொடுக்க ஆட்சியா் அலுவலக நுழைவாயில் அருகே சிலா் உள்ளனா். அவா்களிடம் பணம் கொடுத்து மனுக்களாக எழுதி வாங்கி ஆட்சியரிடம் பொதுமக்கள் அளிக்கின்றனா். இதை அறிந்த தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி, மனுக்களை பொதுமக்களுக்கு இலவசமாக எழுதி வழங்குமாறு மகளிா் திட்டக் குழுவினருக்கு அறிவுறுத்தினாா்.
இதையடுத்து தருமபுரி மாவட்டத்தில் 8 ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து தலா ஒரு மகளிா் திட்ட ஊழியா் என 8 போ், நகா்ப்புறத்திலிருந்து இரு ஊழியா்கள் என மொத்தம் 10 போ் ஆட்சியா் அலுவலக நுழைவாயிலில் வரிசையாக அமா்ந்து அங்குவந்த பொதுமக்களுக்கு இலவசமாக மனுக்களை எழுதி கொடுத்தனா். இது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.