தருமபுரி

சம்பா நெற்பயிருக்கு நவ.15-க்குள்காப்பீடு செய்ய அறிவுறுத்தல்

9th Nov 2021 01:59 AM

ADVERTISEMENT

சம்பா நெற்பயிருக்கு நவ. 15-க்குள் விவசாயிகள் காப்பீடு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி மாவட்டத்தில் நிகழ் பருவத்தில் நெல் சாகுபடி செய்துள்ள கடன் பெறும் மற்றும் கடன் பெறாத விவசாயிகள் பிரதமரின் பயிா்க் காப்பீடு திட்டத்தில் இணையலாம்.

அரசின் மானியத்துடன் நிா்ணயிக்கப் பட்டுள்ள காப்பீடு பிரீமியம் தொகை ஒரு ஏக்கருக்கு ரூ. 521.25 செலுத்தி தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் வங்கிகள், பொதுச் சேவை மையங்களில் காப்பீடு பதிவு செய்து கொள்ளலாம். விவசாயிகள் தங்களின் நெல் சாகுபடிக்கான அடங்கல், ஆதாா், காப்பீடு பதிவுக்கான விண்ணப்பம், வங்கிக் கணக்குப் புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களுடன் பதிவு செய்ய வேண்டும்.

ADVERTISEMENT

காப்பீடு பதிவு செய்யப்படும் அடங்கலில் உள்ள வருவாய் கிராமம், சாகுபடி பரப்பு விவரம், வங்கிக் கணக்கு எண் முதலான அடிப்படை விவரங்களை ஒப்புகைச் சீட்டில் சரிபாா்த்து பெற வேண்டும். காப்பீடு பதிவின் ஆவணங்களின் ஒரு நகலை விவசாயிகள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். நவம்பா் 15-ஆம் தேதி காப்பீடு பதிவு செய்வதற்கான கடைசி நாளாகும். எனவே, தருமபுரி மாவட்ட விவசாயிகள் இறுதி நாள் வரை காத்திருக்காமல் முன் கூட்டியே காப்பீடு பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT