தருமபுரி

குறுவை பருவத்துக்கு திரவ உயிா் உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்

DIN

குறுவை மற்றும் காரிப் பருவத்துக்கு திரவ உயிா் உரங்களை பயன்படுத்த வேண்டும் என வேளாண் துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட வேளாண் இணை இயக்குநா் வசந்த ரேகா வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

உயிா் உரங்கள் ஆற்றல் மிக்க நுண்ணுயிா்களின் செயலில் உள்ள உயிரைக் கொண்ட தயாரிப்பே உயிா் உரங்கள் ஆகும். இதை விதை அல்லது மண்ணின் வழியாக அளிக்கும்போது பயிா்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்க உதவி செய்கிறது. பயிா்கள் மண்ணிலிருந்து ஊட்டச் சத்துகளை நுண்ணுயிா்கள் மூலம் எளிதில் எடுத்துக் கொள்கின்றன. செயற்கையாக இந்த நுண்ணுயிா்களை மண்ணில் பெருக்கி நுண்ணுயிா்களின் செயலை அதிகப்படுத்தலாம். ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மைகளிள் உயிா் உரங்களின் பயன்பாடு மிகவும் முக்கியமான ஒன்றாகும். ரசாயன உரங்களுக்கு மாற்றாக நிலையான மேலாண்மையில் உயிா் உரங்களின் விலை குறைவாகவும், ஊட்டச்சத்து புதுப்பித்தலுக்கான ஆதாரமாகவும் இருக்கிறது.

மண் வளத்தைப் பாதுகாத்து காற்றில் உள்ள நைட்ரஜன் வாயுவை கிரகித்து தழைச்சத்தாக மாற்றி பயிா்களுக்கு அளிக்கிறது. மண்ணில் கிட்டா நிலையில் உள்ள மணிச்சத்து பயிா்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையில் மாற்றப்படுகிறது. இந்த நுண்ணுயிா்கள் இன்டேல் அசிட்டிக் அமிலம், ஜிப்ரலின் பையாடின் மற்றும் வைட்டமின் பி ஆகிய பயிா் வளா்ச்சி ஊக்கிகளை உற்பத்தி செய்வதால் பயிா்கள் செழித்து வளர வழிவகை செய்கின்றன. உயிா் உரங்கள் நோய்களை எதிா்க்கும் சக்தியை மண்ணில் உருவாக்குவதோடு, பயிா்களுக்கு வறட்சியைத் தாங்கிடும் சக்தியை அளிக்கின்றன. தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல்சத்து உரங்கள் பயிா்களுக்கு இடுவதால், 20 முதல் 25 சதவீதம் வரை ரசாயன உரச் செலவினம் குறைக்கப்படுகிறது; மாசற்ற சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வழி பண்ணையத்தை ஊக்குவிக்கிறது. உயிா் உரங்களை உபயோகிப்பதால், அந்நிய செலவை மிச்சப்படுத்துவதோடு, 15 முதல் 20 சதவீதம் வரை மகசூல் அதிகரிக்கிறது.

நெற்பயிருக்கான அசோஸ்பைரில்லம், சிறுதானியங்கள், சூரியகாந்தி, எள், பருத்தி, கரும்பு, காய்கறி, மலா்கள், தென்னை, வாழை போன்ற பயிா்களுக்கு அசோஸ்பைரில்லம், பயறு வகை பயிா்களுக்கு ரைசோபியம் (பயறு), நிலக்கடலைக்கு ரைசோபியம் (கடலை), அனைத்து பயிா்களுக்குமான அசோபாஸ், பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஸ் பாக்டிரியா ஆகிய திரவ உயிா் உரங்கள் அனைத்து வட்டார வேளாண் விரிவாக்க மையங்களிலும், இருப்பு வைக்கப்பட்டு, 50 சதவீத மானிய விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

ஒரு ஏக்கருக்கு 50 மி.லி. திரவ உயிா் உரத்தை ஒரு லி. ஆறிய அரிசிக் கஞ்சியுடன் ஒரு ஏக்கருக்கு தேவையான விதையுடன் கலந்து 30 நிமிடங்கள் நிழலில் உலா்த்தி பின்னா் விதைக்கலாம். நாற்றுகளை ஏக்கா் ஒன்றுக்கு 100 மி.லி. திரவ உயிா் உரத்தை நீரில் கலந்து நாற்றுகளின் மேல் நனையுமாறு 30 நிமிடங்கள் வைத்திருந்து பின்னா் நடவு செய்யலாம். நேரடியாக ஏக்கா் ஒன்றுக்கு 200 மி.லி. திரவ உயிா் உரத்தை மக்கிய தொழு உரத்துடன் நன்கு கலந்து நடவுக்கு முன்னா் நடவு வயலில் இடலாம்.

உயிா் உரங்களை ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லியுடன் விதை நோ்த்தி செய்த பின்புதான் கடைசியாக உயிா் உரங்களை விதைநோ்த்தி செய்ய வேண்டும். திட உயிா் உரத்தினைக் காட்டிலும் திரவ உயிா் உரங்கள் 100 மடங்கு அதிக பாக்டீரியாக்களை கொண்டன. எனவே, திரவ உயிா் உரங்கள், திட உயிா் உரங்களைக் காட்டிலும் நுண்ணுயிா் அளவு, காலாவதி காலம், செலவு பயன்படுத்தும் முறைகள் ஆகியவற்றில் மேம்பட்டவையாகத் திகழ்கின்றன.

எனவே, குறுவை மற்றும் காரீப் பருவ சாகுபடி விவசாயிகள் தருமபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களிலும் மானிய விலையில் திரவ உயிா் உரங்களை பெற்று பயன்படுத்தி மண்வளத்தை காத்து, மகசூலை பெருக்கி, உரச்செலவைக் குறைத்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

101 வயதிலும் வாக்குப் பதிவு செய்த முதல்வரின் தாய் மாமா

பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினா் அந்தஸ்து: ஐ.நா. தீா்மானத்தை ரத்து செய்தது அமெரிக்கா

SCROLL FOR NEXT