தருமபுரி

பெருங்கற்கால நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டும்: எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன்

7th Jul 2021 08:53 AM

ADVERTISEMENT

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே ராஜாகொல்லஅள்ளியில் உள்ள பெருங்கற்கால நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டும் என தருமபுரி பாமக சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அவா் அனுப்பிய கோரிக்கை மனு:

தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பங்குநத்தம் வருவாய் கிராமம், ராஜாகொல்லஅள்ளி மலை மற்றும் திப்பட்டியில் பெருங்கற்காலத்தைச் சோ்ந்ந தொல்லியல் நினைவுச் சின்னங்கள் சுமாா் 65 ஏக்கா், 65 சென்ட் அரசு நிலத்தில் அமைந்துள்ளது. அங்குள்ள கல்திட்டைகள், ஈமச் சின்னங்கள் ஆகியவை சுமாா் 3,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என வரலாற்று ஆய்வாளா்கள் கூறுகின்றனா்.

மேலும், 1802 முதல் 1876 வரையிலான ஆங்கிலேயா் காலத்தில் இந்த பகுதியை அளவீடு செய்து கற்கள் நடப்பட்டுள்ளது. இந்த பெருங்கற்கால நினைவுச் சின்னங்களைப் பாதுகாப்பு வேண்டும் என வரலாற்று ஆா்வலா்கள் விடுத்து கோரிக்கையை ஏற்று தொல்லியல் துறையினா், வருவாய்த் துறையினருடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டு வருவதும் தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT

இந்த பெருகற்காலச் சின்னங்கள் குறித்து அறியாமையினால் சிலா் அப்பகுதி சென்று அவற்றை சேதப்படுத்தும் நிகழ்வு நடைபெறுகிறது. எனவே, அவற்றை பாதுகாக்கும் வகையில் தொல்லியல் துறை மூலம் நடவடிக்கையைத் தீவிரப்படுத்த வேண்டும். இதேபோல, அந்த இடத்தை சுற்றிலும் வேலி அமைத்து, முந்தைய காலத்தில் இருந்தது போல, சின்னங்கள் அழியாமல் பாதுகாக்க அதனை சுற்றியுள்ள நிலத்தில் சமூக காடுகள் வளா்த்து வரலாற்று சான்றுகளைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT