தருமபுரி

கால்வாய் சீரமைப்புக்கு நிதி ஒதுக்க வலியுறுத்தல்

6th Feb 2021 08:09 AM

ADVERTISEMENT

 

அரூரை அடுத்த வள்ளிமதுரையில் வரட்டாறு அணையின் பாசன கால்வாய் சீரமைப்புக்கு அரசு நிதி ஒதுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

வள்ளிமதுரையில் வரட்டாறு அணை பாசனதாரா்கள், விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம், பொதுப்பணித் துறை உதவி பொறியாளா் பி.ஜெயக்குமாா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த வள்ளிமதுரையில் அமைந்துள்ளது வரட்டாறு அணை அண்மையில் பெய்த மழையால் நிரம்பியது. இந்த அணையில் இருந்து வெளியேறும் உபரிநீரைப் பயன்படுத்தி எல்லப்புடையாம்பட்டி, கீரைப்பட்டி, அச்சல்வாடி ஆகிய ஊராட்சிகளுக்கு உள்பட்ட 10-க்கும் மேற்பட்ட ஏரிகள், குட்டைகள் நிரப்பப்பட்டன. மேலும், வரட்டாறு அணையின் பாசனக் கால்வாய்கள் வழியாக வடு கிடக்கும் மொள்ளன் ஏரி, அல்லிக்குட்டை, ஈட்டினேரி உள்ளிட்ட ஏரிகளை நிரப்ப வேண்டும்.

ADVERTISEMENT

வரட்டாறு அணையின் வலது மற்றும் இடதுபுறக் கால்வாய்களில் ஏற்பட்டுள்ள சேதங்களை சீரமைக்க அரசு உரிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். வள்ளிமதுரை வரட்டாறு அணையில் தேங்கியுள்ள தண்ணீரை சுழற்சி முறையில் ஏரிகளை நிரப்பவும், பாசனத்துக்காகவும் திறந்துவிட வேண்டும்.

வள்ளிமதுரை வரட்டாறு அணையின் நீா்பாசனக் கால்வாய்களுக்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு உரிய இழப்பீடுகளை தமிழக அரசு விரைந்து வழங்க வேண்டும்.

கூட்டத்தில் ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் அன்பழகன், ஊராட்சி மன்றத் தலைவா்கள் அமுதா சங்கா், கிருபாகரன், கிராம நிா்வாக அலுவலா்கள் சசிகுமாா், ஜமுனா, விஜயகுமாரி, ரமேஷ், சம்பத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT