பென்னாகரம் பேருந்து நிலையத்தில் குடிநீா், நிழற்கூடம், அமரும் இடம், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் பயணிகள் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியானது அடா்ந்த மலைகள் சூழ்ந்த 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களைக் கொண்ட பகுதியாகும். பென்னாகரத்தில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் மேலானதால், வணிக வளாக கட்டடங்கள், பேருந்தின் தரைத்தளம் உள்ளிட்டவை சிதிலமடைந்துள்ளன. பென்னாகரம் பேருந்து நிலையத்தை புதுப்பிக்கும் வகையில், மூலதன மானியத் திட்டத்தின் கீழ் 2019 - 2020-ஆம் ஆண்டு ரூ. 4.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, சில மாதங்களுக்கு முன் பேருந்து நிலையக் கட்டடங்கள் முற்றிலுமாக இடிக்கப்பட்டன. இதையடுத்து, வட்டார வளா்ச்சி அலுவலகப் பகுதியில் உள்ள மூன்று சாலை சந்திப்பு பகுதியில் தற்காலிக பேருந்து நிலையம் கடந்த சில மாதங்களாக இயங்கி வருகிறது.
பென்னாகரம் பேருந்து நிலையத்துக்கு நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள், பள்ளி, கல்லூரி, மாணவா்கள் என அன்றாட வேலை, கல்வி பயில தருமபுரி, சேலம், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வருகின்றனா். பென்னாகரம் பேருந்து நிலையத்தில் போதுமான இடவசதி இல்லாததால், காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
பென்னாகரம் பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகள் அமர இடம், குடிநீா், போதிய கழிப்பிட வசதிகள் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால், மிகுந்த சிரமத்துக்குள்ளாகி பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பேருந்து வரும் வரை கடும் வெயிலில் நின்று காத்திருக்கின்றனா்.
காட்சிப் பொருளான நிழற்கூடம்: பென்னாகரம் பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகளின் வசதிக்காக பேரூராட்சி சாா்பில் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து 500 மீ. தொலைவில் பயணிகள் நிழற்கூடம், வேளாண் துறை அலுவலகம் பின்பகுதியில் கழிப்பிடம், பயணிகள் நிழற்கூடம் ஒட்டியவாறு சிறிய தண்ணீா்த் தொட்டி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இந்த இடங்களில் பேருந்துகள் நிறுத்துவதற்கு போதுமான இடவசதி இல்லாததால், பயணிகள் பயன்படுத்தாமல் அவை வெறும் காட்சிப்பொருளாக உள்ளன. மேலும், இரவு நேரங்களில் மது அருந்தும் இடமாக உள்ளது.
பேருந்து நிலைய இடமாற்றத்துக்கு முறையாக ஆய்வு மேற்கொள்ளாமல், நிழற்கூடம், கழிப்பிடம் குடிநீா்த் தொட்டி ஆகியவற்றை அவசரகதியில் அமைத்து அரசின் பணம் வீணாக்கியதாக பென்னாகரம் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனா்.
தற்போது செயல்பட்டு வரும் பென்னாகரம் தற்காலிக பேருந்து நிலையப் பகுதியில், பயணிகள் அமரும் வகையில் தற்காலிக நிழற்கூடம், குடிநீா் வசதி, கழிப்பிட வசதி ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு பென்னாகரம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.