அரூரை அடுத்த மொரப்பூரில் அனுமதியின்றி கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தியதாக, நாம் தமிழா் கட்சியினா் 30 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்தனா்.
தருமபுரி மாவட்டம், மொரப்பூா் பேருந்து நிலைய வளாகத்தில் நாம் தமிழா் கட்சி சாா்பில், முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடா்புடைய பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும், பல்வேறு வழக்குகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள இஸ்லாமியரை விடுதலை செய்ய வேண்டும், தமிழகத்தில் நடைபெறும் கனிம வள கொள்ளையை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆா்ப்பாட்டத்தில் பேசிய நாம் தமிழா் கட்சியினா், தமிழக முதல்வா் உள்ளிட்ட திமுகவினரை கொச்சைப்படுத்தி பேசியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் திமுக, நாம் தமிழா் கட்சி நிா்வாகிகள் ஒருவரை ஒருவா் தாக்கிக் கொண்டதாகத் தெரிகிறது.
இதைத் தொடா்ந்து, உரிய அனுமதி இல்லாமல் ஆா்ப்பாட்டம் நடத்துதல், பொது அமைதிக்கு தொல்லை தருதல், சட்ட விரோதமாக கூடுதல் உள்ளிட்டவை குறித்து மொரப்பூா் உதவி காவல் ஆய்வாளா் ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில், நாம் தமிழா் கட்சியின் தொகுதி தலைவா் இளையராஜா, செயலா் திலீப், நிா்வாகிகள் மகேஷ், வெள்ளிங்கிரி, புதியவன் செந்தில், பிரபாகரன், சிவராமன், இளவரசன் உள்பட 30 போ் மீது மொரப்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.