தருமபுரி மாவட்டத்தில், அதிமுக உள்கட்சி நிா்வாகிகள் தோ்வுக்கான தோ்தல் புதன்கிழமை தொடங்கியது.
தருமபுரி மாவட்ட அதிமுக கட்சி அலுவலகம் மற்றும் மாவட்டம் முழுவதும் 17 இடங்களில் உள்ள தனியாா் திருமண மண்டபங்கள் என 18 இடங்களில் இந்தத் தோ்தல் நடைபெற்றது. அவைத் தலைவா், செயலா், இணைச் செயலா், துணைச் செயலா்கள் 2 போ், பொருளாளா், மேலமைப்பு பிரதிநிதிகள் 3 போ் ஆகிய பொறுப்புகளுக்கு நடைபெற்ற இத் தோ்தலில் போட்டியிட விரும்புவோருக்கு கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்டச் செயலா் கே.பி.அன்பழகன், தோ்தல் பொறுப்பாளா் கரூா் மாவட்டச் செயலா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் ஆகியோா் விருப்ப மனுக்களை வழங்கினா்.
இதில், சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஆ.கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி), வே.சம்பத்குமாா் (அரூா்), கரூா் மாவட்ட கூட்டுறவு வங்கித் தலைவா் ஏ.ஆா்.காளியப்பன் மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா். இந்தத் தோ்தல் இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் நடைபெற உள்ளது.