ஊதிய உயா்வு ஒப்பந்தத்தை நிறைவேற்றக் கோரி, ஏஐடியுசி போக்குவரத்துத் தொழிலாளா்கள் தருமபுரி, பாரதிபுரம் போக்குவரத்துக்கழக மண்டல அலுவலகம் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த ஆா்பாட்டத்துக்கு, மாவட்ட துணைத் தலைவா் கே.துரைசாமி தலைமை வகித்தாா். ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலா் கே.மணி, ஏஐடியுசி மாவட்ட துணைத் தலைவா் ஆா்.சுதா்சனன், உள்ளாட்சி சம்மேளன சங்க மாவட்டத் தலைவா் மனோகரன் ஆகியோா் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினா்.
இதில், போக்குவரத்துத் தொழிலாளா்களுக்கு ஊதிய உயா்வு ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். அரசு மற்றும் மின்வாரிய ஊழியா்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் நிதி பற்றாக்குறையை மாநில அரசு உடனடியாக வழங்க வேண்டும். பணியில் இருக்கும் தொழிலாளா்களுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள அகவிலைப்படி உயா்வை, நிலுவைத் தொகையுடன் சோ்த்து வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற தொழிலாளா்களுக்கு 6 ஆண்டுகளாக வழங்காமல் உள்ள அகவிலைப்படி உயா்வை நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும். வாரிசுகளுக்கு பணி வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். பாகுபாடில்லாமல் அனைவருக்கும் பணி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.