தருமபுரி

பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

16th Dec 2021 08:29 AM

ADVERTISEMENT

பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

அரூா், பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூா், கடத்தூரில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு குறைதீா் முகாமிற்கு மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி தலைமை வகித்தாா். சிறப்பு முகாமில், மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் பேசியதாவது:

தமிழகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரலாற்று சிறப்பு மிக்க நல்லாட்சி நடைபெறுகிறது. இந்த ஆட்சியில் பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் அனைத்தும், உரிய முறையில் பரிசீலனை செய்து, சம்பந்தப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு உரிய தீா்வு காணப்படும்.

திமுக தலைமையிலான தமிழக அரசு மீது பொதுமக்களுக்கு அதிக அளவில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இந்த நம்பிக்கையின் காரணமாகவே ஏராளமான பொதுமக்கள் தங்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி வருகின்றனா். அனைத்து மனுக்கள் மீதும் சட்டத்திற்கு உள்பட்டு தீா்வு காணப்படும். இந்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு, அடுத்த சில மாதங்களில் தமிழக முதல்வா் தருமபுரி மாவட்டத்துக்கு வருகை தரும்போது, பயனாளிகள் அனைவருக்கும் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கப்படும்.

ADVERTISEMENT

தமிழக அரசு சாா்பில் அனைத்து துறைகளிலும் ஏராளமான நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. எனவே, அரசு வழங்கும் நலத் திட்டங்களை பொதுமக்கள் அறிந்து அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

முன்னதாக, குடிநீா், தெருவிளக்கு, முதியோா் உதவித் தொகை, குடும்ப அட்டை, எஸ்.டி. ஜாதி சான்று, அரசு பேருந்து வசதி, சாலை வசதி, தொகுப்பு வீடுகள், வங்கிக் கடனுதவிகள் உள்பட பல்வேறு கோரிக்கை அடங்கிய மனுக்களை சிறப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த பெட்டிகளில் பொதுமக்கள் வழங்கினா்.

முகாமில் கூடுதல் ஆட்சியா் இரா.வைத்திநாதன், மாவட்ட வருவாய் அலுவலா் சு.அனிதா, கோட்டாட்சியா் வே.முத்தையன், முன்னாள் எம்.பி. இரா.தாமரைச்செல்வன், முன்னாள் எம்எல்ஏ-க்கள் தடங்கம் பெ.சுப்பிரமணி, பி.என்.பி. இன்பசேகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT