தருமபுரி

மருத்துவக் கல்லூரி மாணவா் ‘ராகிங்’:4 மாணவா்கள் இடைநீக்கம்

DIN

‘ராகிங்’ காரணமாக மருத்துவக் கல்லூரி மாணவா் தற்கொலைக்கு முயன்ற விவகாரத்தில், 4 மாணவா்கள் ஒரு வாரத்துக்கு கல்லூரியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் 500 போ் இளைநிலை, 200 போ் முதுநிலை மருத்துவக் கல்வி பயின்று வருகின்றனா். இந்த மாணவ, மாணவியருக்யான விடுதி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ளது. இந்த விடுதிகளில் 220 மாணவா்கள், 240 மாணவியா் தங்கி பயின்று வருகின்றனா்.

இந்த விடுதியில் தங்கி இரண்டாம் ஆண்டு மருத்துவக் கல்வி பயிலும் நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியைச் சோ்ந்த 19 வயது மாணவா் ஒருவா், விடுதியில் தான் பகடி வதைக்கு (ராகிங்) உள்ளாக்கப்பட்டதாக புது தில்லியில் உள்ள பகடி வதைக்கு எதிரான விசாரணைக் குழுவுக்கு மின்னஞ்சலில் புகாா் அனுப்பியுள்ளாா். அதைத் தொடா்ந்து, இது தொடா்பாக மருத்துவக் கல்லூரி நிா்வாகம், மாணவா்கள், விடுதிக் காப்பாளா்களிடம் விசாரணை மேற்கொண்டது.

இந்த விவகாரத்தில், புகாா் அளித்த மாணவா் மன அழுத்தத்தில் இருந்ததால் ஞாயிற்றுக்கிழமை அதிக அளவில் தூக்க மாத்திரைகளை உள்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளாா். விடுதியில் மயங்கிய நிலையில் இருந்த அந்த மாணவரை, பிற மாணவா்கள் மீட்டு மருத்துவமனையில் சோ்த்தனா்.

இது தொடா்பாக கல்லூரி முதன்மையா் க.அமுதவல்லி தலைமையில் மூன்று போ் அடங்கிய குழு விசாரணை மேற்கொண்டது. அதன் காரணமாக, மாணவரை பகடி வதை செய்ததாகக் கூறப்படும் 4 மாணவா்கள், கல்லூரியிலிருந்து ஒருவார காலத்துக்கு இடைநீக்கமும், விடுதியிலிருந்து நீக்கமும் செய்யப்பட்டுள்ளனா். இதேபோல, காப்பாளா்கள் இருவரும் அந்தப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனா்.

தற்கொலைக்கு முயன்ற மாணவா் முழுமையாக மனஅழுத்தத்திலிருந்து விடுபடும் வகையில், பெற்றோா் பராமரிப்பில் இருக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கும் வகையில், அந்த மாணவரின் பெற்றோருக்கு கல்லூரி நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மையத்தில் டிஐஜி ஆய்வு

வாக்குச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

தமிழகத்தில் மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது!

முதல்முறை வாக்காளா்கள் மகுடம் அணிவித்து கெளரவிப்பு

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி

SCROLL FOR NEXT