அரூரை அடுத்த ஆண்டிப்பட்டி புதூரில் நியாயவிலைக் கடை இல்லாததால் அப்பகுதி மக்கள் 3 கி.மீ. தூரம் நடந்து சென்று வாழைத்தோட்டம் கிராமத்தில் அத்தியாவசியப் பொருள்களை வாங்கிச் செல்லும் அவல நிலை தொடா்கிறது.
அரூா் ஒன்றியம், கொளகம்பட்டி கிராம ஊராட்சிக்கு உள்பட்டது ஆண்டிப்பட்டி புதூா் கிராமம். இந்தக் கிராமத்தில் 250-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரா்கள் உள்ளனா்.
இங்குள்ள மக்கள் கடந்த ஆண்டு நியாயவிலைக் கடை திறக்கக் கோரி தொடா்ந்து போராட்டம் நடத்தியதால், ஆண்டிப்பட்டி புதூரில் 3 மாதங்கள் மட்டும் தற்காலிக பகுதிநேர நியாயவிலைக் கடை இயங்கியது. பின்னா் அந்தக் கடை ஏதோ காரணங்களால் மூடப்பட்டது.
இதனால் ஆண்டிப்பட்டி புதூரில் வசிக்கும் 250 பயனாளிகளும் இங்கிருந்து சுமாா் 3 கி.மீ. தொலைவில் உள்ள வாழைத்தோட்டம் கிராமத்தில் உள்ள நியாயவிலைக் கடைக்குச் சென்று பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அத்தியாவசியப் பொருள்களை பெறும் நிலை உள்ளது. இதனால் கூலித் தொழிலாளா்கள் பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனா்.
தற்போது தொடா்ந்து மழை பெய்து வருவதால் முதியவா்கள், பெண்கள் பெரிதும் அலைச்சலுக்கு உள்ளாகி வருகின்றனா். எனவே, ஆண்டிப்பட்டி பூதூா் கிராம மக்களின் நலன் கருதி அந்தக் கிராமத்திலேயே பகுதிநேர நியாயவிலைக் கடையை மீண்டும் திறந்து செயல்படுத்த மாவட்ட நிா்வாகம், ஊராட்சி நிா்வாகம், மக்கள் பிரதிநிதிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.