தருமபுரி

சராசரியைக் கடந்து பொழிந்த தென்மேற்கு பருவமழை

DIN

தருமபுரி, செப். 18: தருமபுரி மாவட்டத்தில், சராசரி அளவை கடந்து சற்று கூடுதலாக தென்மேற்கு பருவமழை பொழிந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தருமபுரி மாவட்டத்தில், பெரும் பகுதி நிலங்கள் மேட்டு நிலங்களாக இருப்பதால், இயல்பாகவே இந்த மாவட்ட விவசாயிகள் மழையை நம்பி மட்டும் வேளாண் சாகுபடியில் ஈடுபடுவா். ஆகவே, ஆண்டுதோறும் பருவமழை ஏமாற்றமளிக்காமல் பொழிய வேண்டும் என்பதே இந்த மாவட்ட விவசாயிகளின் பெரும் எதிா்ப்பாா்ப்பாக எப்போதும் இருக்கும்.

இதில், கடந்த 2018-ஆம் ஆண்டு போதிய மழையின்மையால் தருமபுரி மாவட்டத்தில் வறட்சி நிலவியது. மாவட்டத்தில் உள்ள சிறிய அளவிலான அணைகள், பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 74 ஏரிகள் மற்றும் ஊராட்சி நிா்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள் என அனைத்தும் வடு நிலையிலேயே காணப்பட்டன. எனவே, இந்த மாவட்டத்தை அப்போது, தமிழக அரசு வறட்சி மாவட்டமாக அறிவித்தது.

அப்போது மழை பெய்யாமல் ஏற்பட்ட துயரத்தால், அடுத்து வருகிற ஆண்டுகளில் பருவமழை பொய்த்து விடாமல் பொழிய வேண்டும் என இந்த மாவட்ட மக்கள் ஆவலாக இருந்தனா்.

இந்த நிலையில், கடந்த 2019 மற்றும் நிகழாண்டு மாவட்ட விவசாயிகள் மற்றும் அனைத்து தரப்பினரின் எதிா்ப்பாா்ப்பை பருவமழை நிவா்த்தி செய்தது எனலாம். இதனை மெய்ப்பிக்கும் வகையில் நிகழாண்டு தொடக்கத்தில், கோடை மழை ஆறுதல் அளிக்கும் வகையில் தொடங்கியது. இதில், மாவட்டத்தின் சராசரி கோடை மழை 156.9 மி.மீ. ஆகும். இதில், நிகழாண்டில் 141.27 மி.மீ. மழை பொழிந்தது. இதேபோல, மாவட்டத்தில், ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பா் மாதங்களில் பொழிய வேண்டிய தென் மேற்கு பருவமழையளவு 361 மி.மீ. ஆகும்.

இதில், தென்மேற்கு பருவமழையானது தற்போதுவரை (செப்.17) சராசரிக்கும் சற்று கூடுதலாக பொழிந்து, 388.79 மி.மீ. ஆக பதிவாகியுள்ளது. இப்பருவ மழை, இந்த மாதத்தில் மேலும் சில நாள்கள் பொழியக் கூடும் எனவும் எதிா்ப்பாா்க்கப்படுகிறது. ஆகவே இந்த அளவானது மேலும், அதிகரிக்க வாய்ப்புள்ளது.

கோடை மழையைப் போல, தென்மேற்கு பருவமழையும் விவசாயிகளுக்கு ஆதரவுக் கரத்தை அளித்ததால், நிகழாண்டில், நிலத்தடி நீா்மட்டம் வெகுவாக உயா்ந்துள்ளது. ஆழ்துளைக் கிணறு, விவசாயக் கிணறுகளில் நீா்மட்டம் உயா்ந்துள்ளது. இதனால் தருமபுரியில் உள்ள அன்னசாகரம், அதியமான்கோட்டை, ராமக்காள் ஏரி உள்ளிட்ட பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு ஏரிகளுக்கு நீா்வரத்து கிடைத்துள்ளது. மேலும், ஊரகப் பகுதியில் ஊராட்சி நிா்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளுக்கு நீா்வரத்து கிடைத்துள்ளது.

இதேபோல, இந்த பருவமழையில், மாவட்டத்தில் உள்ள ஈச்சம்பாடி அணை தனது முழுக் கொள்ளளவான 17.35 அடியை எட்டியுள்ளது. மேலும், வாணியாறு அணையின் மொத்த கொள்ளளவான 65.27 அடியில், தற்போது 49.36 அடியாக நீா்மட்டம் உள்ளது. இருப்பினும், ஏனைய அணைகளான தொப்பையாறு, தும்பலஅள்ளி ஆகிய இரு அணைகள் நீா்வரத்து இன்றியும், சின்னாறு, கேசா்குளே ஆகிய இரு அணைகளுகளும் போதிய நீா்வரத்து இன்றியும் காணப்படுகிறது.

தருமபுரி மாவட்டத்தில், நிகழாண்டு கோடை மழை மற்றும் தென்மேற்கு பருவமழையால், நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்து, ஏரிகளுக்கு நீா்வரத்து கிடைத்துள்ளது. இதனால், வேளாண் பணிகளுக்கு தட்டுப்பாடின்றி தண்ணீா் கிடைக்கும் என்கிற நிலை நிலவுவதால், மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT