தருமபுரி

மின்சார வாரிய ஒப்பந்த ஊழியர் பலியான சம்பவம்: உறவினர்கள் சாலை மறியல்

11th Nov 2020 04:10 PM

ADVERTISEMENT

 

அரூர்: கோட்டப்பட்டியில் மின்சார வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்த கமல் ராஜ் (32) பலியான சம்பவம் தொடர்பாக அவரது உறவினர்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், கோட்டப்பட்டியைச் சேர்ந்த விவசாயி சண்முகம் மகன் கமல் ராஜ் (32). இவர், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்தாராம். இந்த நிலையில், கோட்டப்பட்டி நகரில், உயர்மின் அழுத்த மின்கம்பிகள் செல்லும் மின் கம்பத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென மின்சாரம் தாக்கியதில் தூக்கிவீசப்பட்ட ஊழியர் கமல் ராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

உறவினர்கள் சாலை மறியல்...

ADVERTISEMENT

மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்த கமல் ராஜின் உறவினர்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய குடியரசு கட்சி பொறுப்பாளர்கள் அரூர் கச்சேரிமேடு சாலை சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர். அதாவது, மின்கம்பத்தில் வேலை செய்து கொண்டிருந்த கமல் ராஜ் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவத்தில், அவருடன் பணிபுரிந்த ஊழியர்களின் சதி வேலையாக இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. மின் கம்பத்தில் திடீரென மின்சாரம் பாய்ந்ததின் காரணத்தை கண்டறிந்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த மின்சார வாரிய ஊழியர் குடும்பத்துக்கு அரசு சார்பில் ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த சாலை மறியல் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் மின்சார வாரிய தருமபுரி மாவட்ட முதன்மை பொறியாளர் பன்னீர்செல்வம், அரூர் செயற்பொறியாளர் எஸ்.பூங்கொடி, டி.எஸ்பி. வி.தமிழ்மணி, வட்டாட்சியர் செல்வகுமார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். மின்சார வாரிய ஊழியர் கமல் ராஜ் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என அரசு அதிகாரிகள் அளித்த உறுதியின் பேரில், சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.

இந்த சாலை மறியல் காரணமாக, அரூர் வழியாக செல்லும் சேலம் - திருப்பத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT