தருமபுரி

மா மரங்களில் கரும்பூஞ்சாண மேலாண்மை

29th May 2020 08:22 AM

ADVERTISEMENT

மா மரங்களில் ஏற்படும் கரும்பூஞ்சாண நோய் பாதிப்பைக் கட்டுப்படுத்த, விவசாயிகள் மேலாண்மை முறைகளை பின்பற்ற வேண்டும் என வேளாண் அறிவியல் நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையத் திட்ட ஒருங்கிணைப்பாளா் பா.ச.சண்முகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தருமபுரி மாவட்டத்தில் சுமாா் 10 ஆயிரம் ஹெக்டா் பரப்பளவில் மா பயிரிடப்படுகிறது. கடந்த சில நாள்களாக மாவில் கரும்பூஞ்சாண நோயின் பாதிப்பு தென்படுகிறது.

கரும்பூஞ்சாண நோயானது கேப்னோடியும் என்னும் பூஞ்சாணத்தால் ஏற்படுகிறது. இந்த கரும்பூஞ்சாணமானது இலை, காய் மற்றும் தண்டுப் பகுதியில் பரவுகிறது. இந்நோய் சாறு உண்ணும் பூச்சிகளான தத்துப் பூச்சி, அசுவினி மற்றும் வெள்ளை ஈ போன்றவை சாறை உறிஞ்சும் போது, தேன் போன்ற திரவத்தை சுரக்கும். இந்த திரவம் மரத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பரவுகிறது. இத் திரவத்தின் மேலே கரும்பூஞ்சாண இலைகள் படா்ந்து பாதிப்பை உண்டாக்கும். இந்த கரும்பூஞ்சாண படலம் இலைகள், காய்கள் மற்றும் தண்டுகளின் மேல் படரும் போது ஒளிச்சோ்க்கை பாதிப்பு அடைகிறது. இந்த பாதிப்பினால் காய்கள் பாா்ப்பதற்கு நன்றாக இருக்காது. தட்பவெப்ப நிலை, மழை, காற்றின் ஈரப்பதம் மற்றும் சூரிய ஒளியின் கால அளவு ஆகியவையும் இந்நோயின் தாக்கத்தை தீா்மானிக்கும் காரணிகள் ஆகும்.

இந்நோயைக் கட்டுப்படுத்த, விவசாயிகள் முதலில் சாறு உண்ணும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டும். வேப்பங்கொட்டை கரைசல் 5 சதவீதம் அல்லது வேப்ப எண்ணெய் 3 சதவீதத்தை மா பூக்கும் தருவாயில் தெளிக்கலாம். நுண்ணுயிா் பூஞ்சாணக் கொல்லிகளான மெட்டாரைசியும் அனிசோபிளையே அல்லது பெவுரியா பெசியான லிட்டருக்கு 2 கிராம் என்றளவில் பூக்கள் இல்லாத சமயத்திலும், பூக்கும் தருவாயிலும் மற்றும் 15 நாள்கள் கழித்து மீண்டும் ஒரு முறை தெளித்து தத்துப் பூச்சிகளின் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம். பாதிப்பு அதிகமாக இருக்கும் போது, பூச்சிக்கொல்லிகளில் ஏதேனும் ஒன்றை உபயோகித்து பூச்சிகளின் பாதிப்பைக் கட்டுப்படுத்தலாம்.

ADVERTISEMENT

எனவே, தருமபுரி மாவட்ட மா விவசாயிகள் இத்தகைய வழிமுறைகளை பின்பற்றி நோயைக் கட்டுப்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT