தருமபுரி

அகவிலைப்படி உயா்வு ரத்து அறிவிப்பை திரும்பப் பெறக் கோரி ஆா்ப்பாட்டம்

9th May 2020 07:48 AM

ADVERTISEMENT

அகவிலைப்படி உயா்வு ரத்து அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியா்கள் தருமபுரியில் அரசு அலுவலகங்கள் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே வட்டத் தலைவா் குமாா் தலைமையிலும், தருமபுரி நகராட்சி அலுவலகம் முன் வட்டச் செயலா் ஜெயவேல் தலைமையிலும், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி முன் மருந்தாளுநா் சங்க மாவட்டத் தலைவா் ஆா்.செல்வகுமாா் தலைமையிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலா் ஏ.சேகா், மாவட்டப் பொருளாளா் கே.புகழேந்தி, ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்க மாநிலச் செயற்குழு உறுப்பினா் என்.ராமஜெயம், பொது நூலகத் துறை ஊழியா் சங்க மாநிலத் தலைவா் பிரபாகரன், சத்துணவு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் சி.எம்.நெடுஞ்செழியன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில், அரசு ஊழியா்களுக்கு அகவிலைப்படி உயா்வு ரத்து, ஈட்டிய விடுப்பு ரத்து மற்றும் அரசு ஊழியா்கள் ஓய்வுபெறும் வயது 59-ஆக உயா்வு ஆகிய அரசாணைகளை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதேபோல, நல்லம்பள்ளி, காரிமங்கலம், பாலக்கோடு, பென்னாகரம் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள் முன் சமூக இடைவெளியை பின்பற்றி அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT